நடிகர் சங்கத் தேர்தல் – விஷாலுக்கு எதிராக களமிறங்கும் ராதிகா!

Get real time updates directly on you device, subscribe now.

2015ம் ஆண்டு நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் நாசர் தலைமையிலான பாண்டவர் அணி, முன்னாள் நிர்வாகிகளான சரத்குமார்-ராதாராவி அணியை பெரும் வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றது.

நடிகர் நாசர் தலைவராகவும், விஷால் பொதுச்செயலாளராகவும், கார்த்தி பொருளாளராகவும், துணை தலைவர்களாக கருணாஸ், பொன்வண்ணன் ஆகியோரும் பதவி வகித்து வந்தார்கள்.

இந்த அணியின் பதவிக்காலம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்துடன் நிறைவு பெற்ற நிலையில் நடிகர் சங்க கட்டிட வேலைகள் காரணமாக புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் 6 மாதங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டது.

இதற்கிடையே சில தினங்களுக்கு முன்பு நடந்த நடிகர் சங்க கூட்டத்தில் ஒய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் தலைமையில் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது.

Related Posts
1 of 211

இந்த தேர்தலில் மீண்டும் தலைவர் பதவிக்கு நாசர், செயலாளர் பதவிக்கு விஷால், பொருளாளர் பதவிக்கு கார்த்தி ஆகியோர் மீண்டும் போட்டியிடப்போவதாக நாசர் தெரிவித்திருக்கிறார். துணைத்தலைவர் பதவிக்கு கடந்த முறை போட்டியிட்ட நடிகர் பொன்வண்ணன் இந்த முறை போட்டியிடவில்லை.

நடிகர் சங்க தேர்தல் ஜுன் 23ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னை எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடைபெறும். தேர்தலில் போட்டியிட விரும்புவோர் வேட்புமனுக்களை 11.6.2019 காலை 11 மணிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். இறுதியாக போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் 14.06.2019 அன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என்று ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் நிர்வாகிகளான சரத்குமார், ராதாரவி ஆகியோர் மீது தற்போதைய அணி போட்ட வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், விஷால் அணியை எதிர்த்து சரத்குமார் தரப்பில் நடிகை ராதிகா தலைமையிலான அணி போட்டியிடும் என்று சொல்லப்படுகிறது. நடிகர் ஆர்.கே.சுரேஷும் நாசர் அணிக்கு எதிர் அணியில் போட்டியிட முடிவு செய்திருக்கிறார். இதனால் இந்த முறை நடிகர் சங்கத் தேர்தல் சென்ற முறையை விட பரபரப்பாக இருக்குமென்று சொல்லப்படுகிறது.