இனி பேசி பிரஜோசனமில்லை : சரத்குமார் மீது சட்ட நடவடிக்கை!

”நடிகர் சங்கத்தின் எல்லா கணக்கு வழக்குகளையும் ஒப்படைத்து விட்டேன்” என்று தேர்தலுக்கு முன்பு இரண்டு மூன்று முறை பேப்பர்களை மீடியாக்களிடம் காட்டினார் சரத்குமார்.
ஆனால் புதிதாக பதவியேற்ற நாசர் தலைமைலான நடிகர் சங்க நிர்வாகிகளோ சரத்குமார் சொல்வது அண்டப்புழுகு இன்னும் எங்களுக்கு முழுமையாக கணக்கு வழக்குகள் வந்து சேரவில்லை அதை மறைத்து விட்டு கணக்குகளை கொடுத்து விட்டேன் என்று பொய் சொல்லிக் கொண்டிருக்கிறார் என்று குற்றம் சாட்டினார்கள்.
அதற்கும் சரத்குமார் திரும்ப திரும்ப பழைய பல்லவியைப் பாடிக்கொண்டிருக்க, இனிமேலும் இப்படியே பேசிக்கொண்டிருந்தால் வேலைக்கு ஆகாது என்று நினைத்த நடிகர் சங்கம் சரத்குமார் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க முடிவு செய்திருக்கிறது.
இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது நடிகர் சங்கம் அதில் கூறியிருப்பதாவது :
சமீபத்தில் நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவர் சரத்குமார் ஊடகங்களுக்கு தந்த பேட்டியை படித்தோம். அதுபற்றி மக்களுக்கும் உறுப்பினர்களுக்கும் சில விளக்கங்களை தர வேண்டியுள்ளது.
நடிகர் சங்க செயல்பாட்டில் இரண்டு விதமான கணக்குகளை பராமரித்து வருவது கட்டாயமாகிறது.
ஒன்று : சங்க சட்டதிட்ட விதிகளுக்குட்பட்ட நடிகர் சங்க கணக்குகள்!
மற்றொன்று : அறக்கட்டளை ( ட்ரஸ்ட் ) சட்ட விதிகளுக்குட்பட்ட கணக்குகள்!
இரண்டையும் நிர்வகிக்க வேண்டியது நடிகர் சங்க நிர்வாகிகளின் கடமையாகும். தேர்ந்த முடிந்த உடன் பழைய நிர்வாகிகள் புதிய நிர்வாகிகளிடம் இரண்டின் கணக்குகளையும் சட்டப்படி ஒப்படைத்திருக்க வேண்டும்.
ஆனால் தேர்தல் முடிந்த மறுநாள் நடிகர் சரத்குமார் நடிகர் சங்க கணக்குகள் 7 நாட்களிலும், அறக்கட்டளை கணக்குகள் 15 நாட்களிலும் ஒப்படைப்பேன் என்றார். நாங்கள் ஒரு மாதம் வரை காத்திருந்தோம். ஆனால் கணக்குகளை ஒப்படைக்கவில்லை.
பலமுறை நினைவூட்டல் கடிதங்கள் அனுப்பினோம். அதன் பின்னர் நவம்பர் 27-ம் தேதி 2014-2015ம் ஆண்டுக்கான நடிகர் சங்க கணக்கை மட்டும் ஒப்படைத்தனர். அதிலும் ஏப்ரல் – அக்டோபர் வரையிலான 6 மாதக் கணக்கு குறிப்பிடவில்லை. அவர்கள் கொடுத்த ஒரு வருடக் கணக்கு தணிக்கை செய்யப்பட்டு வருகிறது. அறக்கட்டளைக்கு கடந்த இரண் டரை வருடங்களுக்கான கணக்கு தரப்படவேண்டியுள்ளது.
கடந்த டிசம்பர் 26 அன்று நடைபெற்ற நடிகர் சங்க செயற்குழு மற்றும் அறக்கட்டளைக் கூட்டத்துக்குப் பின், நடிகர் சங்க கணக்கு வழக்குகளை பழைய நிர்வாகிகள் உடனே ஒப்படைக்கவில்லை எனில் சட்டப்படி நட வடிக்கை எடுப்போம் என்று அறிவித்திருந்தோம்.
அதற்குப் பதில் சொல்லாமல், நடிகர் சங்க கணக்கை மட்டும் கொடுத்துவிட்டு, கணக்கை ஒப்படைத்து விட்டதற்கான ரசீது வைத்துள்ளோம் என்றும் புதிய நிர்வாகிகள் பொதுக்குழுவைக் கூட்டினால் அறக்கட்டளைக் கணக்கை ஒப்படைப்பேன் என்றும் முன்னுக்குப் பின்னாக சரத்குமார் கூறியுள்ளார்.
முந்தைய வருட கணக்குகளை தணிக்கை செய்து பொதுக்குழுவில் வைத்து ஒப்புதல் பெற வேண்டும் என்பது பல வருடங்களாக தலைவர், செயலாளர், பொருளாளர் போன்ற முக்கியப் பொறுப்பில் இருந்த சரத்குமார், ராதாரவி, சந்திரசேகருக்கு தெரியாதா? அவர்கள் கணக்கை ஒப்படைத்த 21 நாட்களுக்குள் பொதுக்குழுவைக் கூட்ட நடிகர் சங்கம் தயாராக உள்ளது.
உறுப்பினர்கள் மற்றும் சங்க நலனுக்காக கூடிய விரைவில் இவர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.