நட்பே துணை – விமர்சனம் #NatpeThunai
RATING – 3/5
‘மீசைய முறுக்கு’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியாகியிருக்கும் இரண்டாவது படம் தான் இந்த ‘நட்பே துணை’.
படத்தின் டைட்டில் நட்பைப் பற்றி பேசுவது போல இருந்தாலும், முக்கால்வாசி காட்சிகள் அரசியலையும், விளையாட்டுத் துறையில் இருக்கும் ஏற்றத் தாழ்வுகளைப் பற்றித்தான் பேசுகிறது.
காரைக்காலில் உள்ள பிரபலமான ஹாக்கி விளையாட்டு மைதானத்தை உள்ளூர் அரசியல்வாதியான கரு.பழனியப்பன் துணையுடன் அபகரிக்க ஒரு கார்ப்பரேட் நிறுவனம் முயற்சிக்கிறது.
அவர்களிடமிருந்து அந்த விளையாட்டு மைதானத்தை ஹீரோ ஆதி உதவியுடன் சக விளையாட்டு வீரர்கள் எப்படி மீட்கிறார்கள்? என்பதே மீதிக்கதை.
முதல் பாதியில் ஹீரோயின் அனகாவின் பின்னால் காதல் காதல் என்று தமிழ்சினிமாவின் ‘வழக்கப்படி’ சுற்றி சுற்றி வருகிறார் ஹீரோ ஆதி. பிறகு மைதானத்தை மீட்பதற்காக அவரே களத்தில் இறங்கும் போது நடிப்பில் அடுத்த லெவலுக்கு செல்கிறார்.
‘மீசைய முறுக்கு’ படத்தில் வந்த ஆத்மிகாவை ஜெராக்ஸ் எடுத்த மாதிரி கொஞ்சம் ஆண் சாயலுடன் போல்ட்டான ஹாக்கி வீரராக வருகிறார் நாயகி அனகா. காதல் காட்சிகளிலோ, மற்ற காட்சிகளிலோ அவருக்கு பெரிதாக ஸ்கோப் இல்லை. என்றாலும் வந்தவரை நிறைவாகச் செய்திருக்கிறார்.
படத்தில் நம்மை ரொம்பவே கவனம் ஈர்ப்பவர் வில்லனாகவும், உள்ளூர் அரசியல்வாதியாகவும் வரும் இயக்குனர் கரு.பழனியப்பன் தான். சமகால அரசியலை தனக்கே உரிய பாணியில் நக்கல் செய்கிற காட்சிகளில் மொத்த தியேட்டரும் கைதட்டல்களால் அதிர்கின்றன.
ஹாக்கி விளையாட்டின் கோச்சாக வரும் ஹரீஸ் உத்தமன் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆர்.ஜே விக்னேஷ், ‘எரும சாணி’ விஜய், ‘புட் சட்னி’ ராஜ்மோகன், ஷாரா, பிஜிலி ரமேஷ் என பல யு-ட்யூப் பிரபலங்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கேரக்டரை சரியாகச் செய்திருக்கிறார்கள்.
இடைவேளைக்குப் பிறகு நடக்கும் ஹாக்கி விளையாட்டுப் போட்டி சம்பந்தப்பட்ட காட்சிகள் ஒரு நிஜ விளையாட்டை நாம் நேரில் பார்ப்பது போன்ற உணர்வை நமக்குள் முழுமையாகக் கடத்துகிறது. அதற்கு ஹிப் ஹாப் ஆதியின் பரபரப்பான பின்னணி இசையும், அரவிந்த் சிங்க்கின் நேர்த்தியான ஒளிப்பதிவும்,ஃபென்னியின் கச்சிதமான எடிட்டிங்கும் பலம் சேர்த்திருக்கின்றன.
ஹாக்கி விளையாட்டை மேம்போக்காக காட்டாமல், அதில் இருக்கும் சின்ன சின்ன விஷயங்களைக் கூட கவனமாக காட்சிப்படுத்தியிருப்பது பாராட்டுக்குரியது.
விளையாட்டு என்றால் கிரிக்கெட் மட்டுமல்ல, அதையும் தாண்டி பல விளையாட்டுகள் இருக்கின்றன. அந்த வகையில் ஹாக்கி விளையாட்டையும், சமகால அரசியலையும், நட்பு கலந்து விறுவிறுப்பான விளையாட்டை நேரில் பார்த்த நிறைவான உணர்வை திரையில் தந்திருக்கிறார் அறிமுக இயக்குனர் பார்த்திபன் தேசிங்கு.
நட்பே துணை – கொண்டாட்டம்!