தனுஷுக்கு வில்லனாக களமிறங்கும் பிரபல தெலுங்கு ஹீரோ!
சொந்தக் கம்பெனியில் அடுத்தடுத்து படமெடுத்து நஷ்டமாகி விட்டதால் வெளிப்படங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார் தனுஷ்.
அதில் ஒன்றாக தனுஷ் நாயகனாக நடிக்க சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் இன்னும் டைட்டில் வைக்கப்படாத “தயாரிப்பு எண் 34” படத்தில் நடித்து வருகிறார்.
துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முழு மூச்சில் நடந்து கொண்டிருக்கிறது. இந்த படத்தில் மிகவும் பிரபலமான பலர் இணைந்திருப்பது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. அதில் சமீபத்திய வரவாக பிரபல தெலுங்கு நடிகர் நவீன் சந்திரா இந்த படத்தில் தனுஷுடன் இணைந்திருக்கிறார். அவர் மிக முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் தனுஷ் உடன் இணைந்து நடிக்கிறார்.
இயக்குனர் துரை செந்தில்குமார் இது குறித்து கூறும்போது, “நடிகர் நவீன் சந்திரா இந்த படத்தில் இணைவது குறித்து நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். வெவ்வேறு பரிமாணங்களில் அவரின் மிகச்சிறப்பான நடிப்பு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அவரும் இந்த படத்தில் இணைந்திருப்பது படத்துக்கு கூடுதல் மதிப்பை அளிக்கும் என்பதால் எங்களுக்கு மகிழ்ச்சி” என்றார்.