டாஸ்மாக் கடைகளில் கள்ளை விற்கலாம்: இயக்குநர் பேரரசு பரிந்துரை!
பனை மரத்தைச் சார்ந்து வாழும் பனையேறிகளின் வாழ்வியல் பின்னணியில் உருவாகி இருக்கும் படம் ‘நெடுமி’.இப்படத்தை நந்தா லட்சுமணன் இயக்கியுள்ளார்.ஹரிஸ்வர் புரொடக்ஷன்ஸ் சார்பில் வேல்முருகன் தயாரித்துள்ளார்.இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது.விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் பேரரசு, பத்திரிகையாளர்கள் பயில்வான் ரங்கநாதன், முக்தார் அகமது ஆகியோர் கலந்து கொண்டனர்.
இயக்குநர் பேரரசு பேசும்போது,
“நான் பொங்கல் விழாவுக்கு ஊருக்குச் சென்றிருந்தேன் தாமதமாக வரலாம் என்று நினைத்திருந்தேன்.ஆனால் இது மாதிரி படங்களை ஊக்குவிக்க வேண்டும் என்று இந்தப் பட விழாவிற்காக முன்னதாகவே வந்திருக்கிறேன்.
பனை மரத்திற்குத் தமிழ்நாட்டில் பல சிறப்புகள் உண்டு. பிற மரங்களுக்கு இல்லாத சிறப்புகள் பனை மரத்திற்குண்டு.பனை மரத்தில் தான் ஆண், பெண் என்று இரு வகைகள் உள்ளன. மற்றதெல்லாம் நீரை உறிஞ்சி தான் வாழும். ஆனால் நீரே இல்லாத இடத்தில் கூட பனைமரம் தானாக வளர்ந்து பலன் தரும். பனை மரத்தின் எல்லா பாகங்களும் பயன்படும். பனை ஓலை, மரம், பழம், கருப்பட்டி, நுங்கு, கள், பதநீர் என்று எத்தனை பயன்கள்!இப்படிப்பட்ட பனை மரத்தின் சிறப்புகளைப் பேசும் வகையில் இந்தப் படம் உருவாகி இருப்பது மகிழ்ச்சி.
கள் குடிப்பது உடல் நலத்துக்குக் கேடு கிடையாது .சிறிய போதை தரும் அவ்வளவுதான் உடலைக் கெடுக்காது.அப்படி இருந்தும் கள்ளுக்கடைகளை ஊருக்கு ஒதுக்குப் புறமாக அந்தக்காலத்தில் வைத்தார்கள். ஆனால் இப்போது தெருவுக்கு தெரு டாஸ்மாக் கடைகள் வந்து விட்டன. என்னைக் கேட்டால் டாஸ்மாக்கில் கள்ளை விற்கலாம் .அதற்கு ஒரு விலைய வைத்துக் கொள்ளுங்கள்.உடலை கெடுக்கும் மதுவை விட ஊட்டச்சத்து நிறைந்த கள் எவ்வளவோ மேல்.கள்ளை டாஸ்மாக் கடையில் விற்க வைத்து அதை நம்பி இருக்கும் அனைவருக்கும் வாழ்வாதாரத்தை உயர்த்தலாம்.