முடிந்தால் துப்பறிவாளனை காப்பாற்றிக் கொள்ளுங்கள் : விஷாலுக்கு சவால் விட்ட தமிழ் ராக்கர்ஸ், தமிழ் கன்!

தயாரிப்பாளர் சங்கத் தலைவராக விஷால் பொறுப்பேற்றதும் இணையதளங்களில் புதிய படங்களின் பதிவேற்றம் மற்றும் திருட்டு வி.சி.டி விற்பனைத் தொழிலில் ஈடுபடுபவர்களை கண்டுபிடிக்க தயாரிப்பாளர் சங்கம் சார்பில் ஒரு குழுவை அமைத்து கண்காணித்து வந்தனர். அதற்காகத் தனி அலுவலகம் ஒன்றையும் அமைத்தனர்.
அந்தக் குழுவினரின் பல மாதங்களின் தேடுதல் வேட்டையில் நேற்று மாலை தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தின் அட்மின் திருவல்லிக்கேணி போலீசாரால் கைது செய்யப்பட்டார் என்று தகவல் வெளியானது.
கைது செய்யப்பட்டவர் பெயர் கெளரி சங்கர் என்றும், வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அவர் 100க்கும் மேற்பட்ட போலி முகவரிகள் மூலமாக புதிய படங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்து வந்தார் என்று சொல்லப்பட்டது.
அதே சமயம் கைது செய்யப்பட்டவர் முதலில் தமிழ் ராக்கர்ஸ் அட்மின் என்றும், பின்னர் அவர் தமிழ் கன் அட்மின் என்றும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவியது.
ஆனால் அப்படி வந்த செய்தி தவறான செய்தி என்று தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் மறுத்தது, அடுத்து தமிழ் கன் இணையதளமும் கைது செய்யப்பட்டவர் எங்கள் அட்மின் இல்லை. என்று உறுதிப்படுத்தியது, அதோடு அப்பாவிகளை கைது செய்வதை நிறுத்திக் கொள்ளுங்கள் என்று காவல்துறைக்கு வேண்டுகோள் வைத்த அந்த இணையதளங்கள் முடிந்தால் உங்கள் துப்பறிவாளன் படம் இணையதளங்களில் வெளியாவதை தடுத்து காப்பாற்றிக் கொள்ளுங்கள் என்று சவால் விட்டிருக்கின்றன.
இன்று வரை கைது செய்யப்பட்டவர் எந்த இணையதளத்தைச் சேர்ந்தவர் என்கிற விபரம் வெளியாகாததால் திரையுலகினர் பெருங்குழப்பத்தில் உள்ளனர்.
அதே சமயம் திரையுலகின் நலனுக்காகவும் விஷால் தொடர்ந்து போராடுகிறார், அவருக்கு நாம் எல்லோருமே பக்கபலமாக இருப்போம் என்கிற திரையுலகுக்கு ஆதரவான கருத்துகளும் வந்து கொண்டிருக்கின்றன.