மூணு மாசமா அலையவிடுறாங்க…, எதுக்குங்க அந்த வரிச்சலுகை? : என்னாமா கோபப்படுறார் இந்த ஹீரோ!

படங்களுக்கு வரிச்சலுகை கொடுப்பது தொடர்பான அரசின் முடிவு அவ்வ்வப்போது பெரும் சர்ச்சையை கிளப்பி விடுகிறது.
உதயநிதி படங்களுக்கு கொடுக்கவில்லை என்றால் அதற்கு என்ன காரணம் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்.
ஆனால் பெரும்பாலான படங்களுக்கும் கொடுக்காமல் இருப்பதோ அல்லது இழுத்தடிப்பதோ தொடர்ந்து கொண்டிருப்பது படம் எடுப்பவர்கள் மத்தியில் பெருங்கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
அப்படி ஒரு கோபத்தோடு தான் பேசினார் புதுமுக நாயகன் கதிர்.
காந்தர்வன் படத்தை முடித்த கையோடு அவரது நடிப்பில் ரிலீசாகப் போகும் இரண்டாவது படம் தான் ஒன்பதிலிருந்து பத்து வரை.
அவருக்கு ஜோடியாக ஸ்வப்னாமேனன் நடிக்க, இயக்குநர்கள் பாக்யராஜிடமும், கே.எஸ்.ரவிக்குமாரிடமும் உதவியாளராக பணியாற்றியவர் விஜய் சண்முகவேல் அய்யனார் இயக்கியிருக்கிறார். கார்த்திக் இசையமைத்திருக்க, ராஜ ரத்தினம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
சென்னையிலிருந்து காஞ்சிபுரம் போற கால்டாக்ஸி டிரைவரான கதிர். அவர் கார்ல பயணம் செய்யும் ரேடியோ ஜாக்கி ஸ்வப்னா மேனன். இரண்டு பேரும் திடீரென ஒரு பிரச்சனையில் மாட்டிக் கொள்ள, விட்டாப் போதும்கிற மனநிலையில தான் பின்னாலேயே அவங்களை போலீஸ் துரத்திக்கிட்டு வருது! ஏன் அவங்களை போலீஸ் துரத்துது? அப்படி என்ன பிரச்சனை நடந்ததுங்கிறதைத்தான் ஒரு ஹைவேஸ் த்ரில்லரா இந்தப்படத்தைஎடுத்திருக்கோம் என்கிறார் டைரக்டர் விஜய் சண்முகவேல் அய்யனார்.
படத்துக்கு யு சர்ட்டிபிகேட் கொடுத்த பிறகு வரிச்சலுகைக்காக விண்ணப்பித்த போது தான் ஹீரோ கதிர் ஏண்டா படமெடுத்தோம் என்கிற நிலைக்கு தள்ளப்பட்டிக்கிறார்.
என்ன நடந்து என்பதை அவரே சொல்கிறார்…
படத்தோட வரிச்சலுகைக்காக அப்ளை பண்ணிட்டு காத்திருந்தப்போ ரொம்பவே அலைய வேண்டியிருந்துச்சு. ஏகப்பட்ட கெடுபிடிகள் பண்ணினாங்க. டைட்டிலை மாத்தணும்னு சொன்னாங்க. மாத்திட்டு போய் நின்னா இல்லை இன்னும் வேற வேற விதிமுறைகள் இருக்குன்னு சொல்லு என்னவெல்லாமோ என்கிட்ட எதிர்பார்த்தாங்க. நீங்க எதிர்பார்க்கிறதை என்னால கொடுக்க முடியாது. நான் ரொம்ப நேர்மையா படமெடுத்திருக்கிறேன்னு சொல்லிட்டு வந்துட்டேன்.
அதுக்கப்புறம் மூணு மாசம் கழிச்சி உங்க படத்துக்கு வரிச்சலுகை கொடுத்தாச்சு. வந்து வாங்கிட்டு போங்கன்னு சொன்னாங்க. இதனாலேயே என்னோட படம் ரிலீஸ் தள்ளிப்போயிடுச்சு. இல்லேன்னு மூணு மாசத்துக்கு முன்னாடியே என் படம் வந்திருக்கும். திட்டமிட்டபடி படமெடுத்துட்டு இது மாதிரியான பிரச்சனைகளால நாம நெனைச்ச தேதியில படத்தை ரிலீஸ் பண்ண முடியாமப் போயிடுது. என்று புலம்பும் கதிர் இப்படி மூணு மாசமா ஆறு மாசமா அலையவிட்டுத்தான் வரிச்சலுகை தருவாங்கன்னா அப்படி ஒரு சலுகையே சினிமாவுக்கு வேணாம் சார், பேசாம அதை நிறுத்திட்டா நாம நிம்மதியா படமெடுக்கலாம் என்றார்.
ஆனாலும் மனுஷனுக்கு ரொம்பத்தான் கோபம் வருது!