ஒரு குப்பைக் கதை – விமர்சனம்
RATING – 3/5
நடித்தவர்கள் – டான்ஸ் மாஸ்டர் தினேஷ், மனிஷா யாதவ், யோகி பாபு மற்றும் பலர்
ஒளிப்பதிவு – மகேஷ் முத்துசுவாமி
இசை – ஜோஷ்வா ஸ்ரீதர் பின்னணி இசை – தீபன் சக்கரவர்த்தி
இயக்கம் – காளி ரங்கசாமி
வகை – நாடகம், காமெடி
சென்சார் பரிந்துரை – ‘U’
கால அளவு – 2 மணி நேரம் 16 நிமிடங்கள்
தமிழ்சினிமாவின் பிரபலமான டான்ஸ் மாஸ்டர்களில் ஒருவரான தினேஷ் ஹீரோவாக அறிமுகமாகியிருக்கும் படம் தான் இந்த ”ஒரு குப்பையின் கதை”.
நண்பன் யோகிபாபுவுடன் குப்பை பொறுக்கும் வேலையைச் செய்து கொண்டு சென்னையின் கூவம் ஓரத்தில் இருக்கும் குடிசைப் பகுதி ஒன்றில் வசித்து வருபவர் ஹீரோ தினேஷ்.
அவருக்கு வால்பாறையைச் சேர்ந்த ஹீரோயின் மனிஷா யாதவ்வுடன் திருமணம் நிச்சயமாகிறது.
தரகர் பெண்ணின் அப்பாவான ஜார்ஜிடம் மாப்பிள்ளை கிளர்க் வேலை செய்பவர் என்று பொய் சொல்லியிருந்தாலும், நான் குப்பை அள்ளும் வேலை செய்பவன் என்கிற உண்மையை சொல்கிறார் தினேஷ்.
அப்படி உண்மையை ஒப்புக் கொண்ட நேர்மைக்காகவே மகளிடம் வேலையைப் பற்றிச் சொல்லாமல் அவரையே திருமணம் செய்து வைக்கிறார் ஜார்ஜ்.
மாப்பிள்ளையோடு சென்னையின் குடிசைப்பகுதிக்கு வரும் மனிஷாவுக்கு அங்கிருக்கும் கொசுக்கடி, சாக்கடை நாற்றம் போன்ற சூழல் குடலைப் புரட்டுகிறது. இருந்தாலும் மாப்பிள்ளை கிளர்க் வேலை செய்பவர் என்பதால் அவரோடு குடும்பம் நடத்துகிறார்.
ஒருநாள் மாமியாரோடு மருத்துவமனைக்கு வருகிற போது அதன் அருகிலேயே தன் கணவர் குப்பை அள்ளும் வாகனத்தில் செல்வதைப் பார்க்கிறார்.
இதனால் அதிர்ச்சியடையும் அவர் தன்னை தினேஷ் தன்னை பொய் சொல்லி ஏமாற்றி திருமணம் செய்து விட்டதாக கோபித்துக் கொண்டு பிறந்த வீட்டுக்குச் செல்ல தயாராகிறார்.
ஆனால் அவரது அப்பாவோ மாப்பிள்ளை பொய் சொல்லவில்லை, நான் தான் இந்த விஷயத்தை திருமணம் ஆகும் வரை என் மகளிடம் சொல்ல வேண்டாம் என்று சொன்னதாகச் சொல்கிறார்.
பிரசவத்திற்காக வால்பாறையில் இருக்கும் அப்பாவின் வீட்டுக்கு வரும் மனிஷா கூவ நாற்றத்துக்கு மத்தியில் தன்னால் தினேஷோடு குடும்பம் நடத்த முடியாது என்று சென்னைக்கு வர மறுக்கிறார்.
மனைவிக்காக அடுக்கு மாடிக்குடியிருப்பில் வாடகைக்கு வீடு எடுத்து தனிக்குடித்தனம் செல்கிறார் தினேஷ். போன இடத்தில் எதிர்த்த வீட்டில் ஒரு பணக்கார இளைஞன் மனிஷாவுடன் நட்புடன் பழக ஆரம்பிக்கிறார்.
தன்னுடைய பகட்டு வாழ்க்கையால் மனிஷாவை மயக்கும் அந்த இளைஞன் தினேஷ் இல்லாத நேரம் பார்த்து மனிஷாவோடு மேலும் நெருக்கமாகிறார். ஒரு கட்டத்தில் தன் பெண் குழந்தையோடு அந்த இளைஞனோடு வீட்டை விட்டே வெளியேறுகிறார் மனிஷா.
இதற்கிடையே மனைவிக்காக குப்பை அள்ளும் வேலையை விட்டுவிட்டு வேறு வேலைக்கு சேர நினைத்துக் கொண்டு வீட்டுக்கு வருகிறார். வந்த இடத்தில் மனைவியும், குழந்தையும் இல்லாதது கண்டு அதிர்ச்சியடைகிறார்.
பகட்டு வாழ்க்கையை நம்பி போன மனிஷாவின் நிலை என்னவானது என்பதே மீதிக்கதை.
பல படங்களில் நடன இயக்குனராக தூள் கிளப்பிய டான்ஸ் மாஸ்டர் தினேஷ் ஹீரோவாக அறிமுகமாகியிருக்கும் முதல் படம். நடிப்பில் இது முதல் படமா? என்றால் நம்பவே முடியாது. அந்தளவுக்கு தனது யதார்த்தம் கலந்த அமைதியான நடிப்பில் படம் பார்ப்பவர்களைப் பரிதாபப்பட வைக்கிறார்.
மனிஷாவை பொண்ணு பார்க்கப் போகிற இடத்தில் வெளிப்படுத்துகிற மெல்லிய காதல், அவரே மனைவியான பிறகு எதிர்த்த வீட்டு இளைஞனுடன் சேர்ந்து வீட்டை விட்டு வெளியேறியவுடன் காட்டுகிற அதிர்ச்சி, விரக்தி, தவறு செய்து விட்டாலும் மனைவியை மன்னித்து விட்டு தன் குழந்தைக்காக தவறை தன் மீது போட்டுக்கொள்ளும் பெரிய மனுஷத் தன்மை என ஒவ்வொரு உணர்ச்சியையும் தனது முகத்தில் முழுமையாக வெளிப்படுத்தி பாராட்டுக்குரியவராகிறார் தினேஷ்.
காதல், நடனம், நட்பு, பாசம், பிரிவு, விரக்தி, சந்தோஷம் என அத்தனை உணர்வுகளையும் எந்த மிகைப்படுத்தலும் இல்லாத நடிப்பின் மூலம் வெளிப்படுத்தி கைதட்டல்களை அள்ளுகிறார்.
ஹீரோயினாக வருகிறார் மனிஷா யாதவ். எப்படித்தான் இந்தப் பொண்ணுக்கு இந்த மாதிரியான கதைகளைத் தேர்வு செய்யும் பக்குவம் வருகிறதோ என்று ஆச்சரியப்படத் தோன்றுகிறது.
வழக்கு எண் 18/9, ஆதலால் காதல் செய்வீர் என சமூகக் கருத்துகளைச் சொல்லும் கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கும் மனிஷா அந்த வரிசையில் இந்தப் படத்திலும் நடிப்பில் ஸ்கோர் செய்கிறார்.
குறிப்பாக சென்னையிலுள்ள கூவம் குடிசைப்பகுதிக்கு வந்தவுடன் அந்தச் சூழல் பிடிக்காமல் படும் அவதியை முகத்தில் வெளிப்படுத்துகிற விதம் அருமை.
தினேஷின் நண்பனாக வரும் யோகிபாபு முதல் பாதியில் கலகலப்புக்கு உத்தரவாதம் தந்திருக்கிறார்.
குப்பத்துப் பாஷையை அச்சு அசல் மாறாமல் பேசி அசத்தும் தினேஷின் அம்மாவாக வரும் ஆதிரா ஒரு காட்சியில் மகனுக்காக மருமகள் காலில் விழுகிற காட்சியில் நெகிழ வைத்து விடுகிறார்.
இவர்களுடன் படத்தில் வரும் மற்ற கேரக்டர்களான ஜார்ஜ், கோவை பானு, செந்தில், லலிதா, சுஜோ மாத்யூஸ், கிரண் ஆர்யன் என அனைவரும் தங்கள் பங்களிப்பை மிகச்சரியாகச் செய்திருக்கிறார்கள்.
வால்பாறை மலைப் பிரதேச அழகையும், கூவத்தின் குடிசைப் பகுதிகளின் இயல்பையும் உள்ளது உள்ளபடி அப்படியே படம் பிடித்துக் காட்டியிருக்கிறது மகேஷ் முத்துசுவாமியின் ஒளிப்பதிவு.
ஜோஷ்வா ஸ்ரீதரின் இசையில் பாடல்கள் மனசை உருக்க, இன்னொரு புறம் தீபன் சக்ரவர்த்தியின் பின்னணி இசை காட்சிகளோடு நம்மை ஒன்றிப் போகச் செய்கிறது.
சென்னையிலிருந்து கிளம்பி ஓசுருக்கு வரும் ஹீரோ தினேஷ் போலீசிடம் வழி கேட்டு ஒரு வீட்டுக்குச் செல்கிறார். மீண்டும் திரும்பி வந்து அதே போலீசிடம் நான் ஒரு கொலை செய்து விட்டேன் என்று சரண்டர் ஆகவும் எதற்காகக் கொலை செய்தார்? என்கிற கேள்வியோடு படம் பார்க்கும் நமக்கு ஆர்வம் தொற்றிக் கொள்கிறது. அதன் பிறகு பிளாஷ்பேக் காட்சிகளாக நகரும் காட்சிகள் கிளைமாக்ஸ் வரை நம்மை இருக்கையோடு கட்டிப் போடுகிறது.
குப்பை பொறுக்கும் வேலை செய்பவர் எடுத்ததுமே அவ்வளவு பெரிய அடுக்குமாடிக் குடியிருப்பில் தனி வீடு வாடகைக்குப் பார்ப்பாரா? அப்படியே போனாலும் அங்கே சிலிண்டர் வாங்கக் கூடவா காசில்லாமல் இருக்கிறார்? போன்ற சில அடிப்படையான லாஜிக் ஓட்டைகளை தவிர்த்திருக்கலாம்.
சமீபகாலமாக கள்ளக் காதல் சம்பந்தமான கொலைச் செய்திகள் தான் செய்தித்தாள்களில் அதிகம் வருகிறது.
பணக்கார வீட்டு இளைஞர்கள் திருமணமான நடுத்தரக் குடும்பத்துப் பெண்களிடம் தங்களுடைய பகட்டு வாழ்க்கையை காட்டி அவர்களை தங்கள் வலையில் வீழ்த்தி சீரழிக்கிறார்கள். அவர்களை நம்பிப் போகும் அந்தப் பெண்களின் கதி என்னவாகிறது? என்பதையே அதிகரித்து வரும் கள்ளக் காதல் என்ற சமூகக் குற்றத்திலிருந்து இளம் பெண்களையும், குடும்பப் பெண்களையும் காப்பாற்றும் விதமாக ஒரு எச்சரிக்கைப் படத்தைக் கொடுத்திருக்கிறார்கள்.
எளிமையாகவும், யதார்த்தமாகவும் காட்சிகளை அமைத்த விதத்தில் முதல் படத்திலேயே நம்பிக்கைக்குரிய இயக்குனராக முத்திரையைப் பதித்திருக்கிறார் அறிமுக இயக்குனர் காளி ரங்கசாமி.
ஒரு குப்பைக் கதை – கோபுர கலசம்