சிவகார்த்திகேயனுடன் என்ன பிரச்சனை? – ஓப்பனாகப் பேசிய டைரக்டர் பாண்டிராஜ்
விஜய் டிவியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயனை தனது ’மெரினா’ படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோவாக தரம் உயர்த்தியவர் இயக்குனர் பாண்டிராஜ்.
தொடர்ந்து ‘எதிர் நீச்சல்’ உட்பட பல ஹிட் படங்களை கொடுத்தார். இன்று முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருந்து வருகிறார்.
முன்னணி ஹீரோ ஆனவுடன் அவருடைய சம்பளமும் உயர்ந்தது. அந்த நேரத்தில் மீண்டும் தனது தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படமெடுக்க ஆசைப்பட்ட பாண்டிராஜிடம் அதிர்ச்சி தரும் சம்பளத்தைக் கேட்டிருக்கிறார் சிவகார்த்திகேயன்.
அதன் காரணமாக இருவருமே பேசிக்கொள்வதில்லை என்கிற கருத்து கோடம்பாக்கத்தில் நிலவி வருகிறது. சமீபத்தில் கூட ‘ஒரு குப்பைக் கதை’ பட விழாவில் கலந்து கொள்ள வந்த சிவகார்த்திகேயனிடம் பாண்டிராஜ் முகம் கொடுத்து பேசவில்லை என்றும் செய்திகள் வெளியானது.
ஆனால், இந்தத் தகவலை மறுத்துள்ளார் இயக்குனர் பாண்டிராஜ்.
இதுகுறித்து ‘செம’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அவர் ”எனக்கும், சிவகார்த்திக்கேயனுக்கும் இடையே எந்தவித பிரச்சினையும் இல்லை. ஒரு குப்பைக் கதை விழா தொடங்குவதற்கு முன்னதாக இருவரும் ஏறக்குறைய அரை மணி நேரம் பேசிக் கொண்டிருந்தோம். பேசி விட்டு நான் தனியாக ஒரு ஓரமாகப் போய் உட்கார்ந்து விட்டேன். ஏனென்றால் எனக்கு அப்படி உட்காருவது தான் பிடிக்கும்.
உண்மை இப்படியிருக்கும் போது விழா மேடையில் பரபரப்பில் நடந்த கவனக்குறைவை பெரிய விசயமாக்கி, எனக்கும் சிவகார்த்திக்கேயனுக்கும் பிரச்சினை என தவறான தகவலை பரப்பி விட்டார்கள். சொல்லப்போனால் சமீபத்தில் கூட எங்களுடைய ‘செம’ படத்தின் சிங்கிள் ட்ராக் பாடலை சிவகார்த்திகேயன் தான் அவருடைய ட்விட்டரில் வெளியிட்டார்” என்றார்.