ஒரு முகத்திரை – விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

Oru-Mugathirai

RATING : 2/5

‘துருவங்கள் 16′ படத்தின் வெற்றிக்குப் பிறகு ரகுமான் நடித்த படங்கள் வேக வேகமாக தூசி தட்டப்பட்டு அடுத்தடுத்து ரிலீசாகி வருகின்றன. அந்த லிஸ்ட்டில் லேட்டஸ்ட் வரவு இந்த ‘ஒரு முகத்திரை.’

மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவம் பார்க்கும் டாக்டருக்கே மனநிலை பாதிக்கப்பட்டால் பாவம் என்ன செய்வார்? அதுதான் இந்தப் படத்தின் சாராம்சம்.

சைக்காலஜி படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பாடம் எடுக்கும் பிரபல மனநல மருத்துவரான ரகுமான் அதே கல்லூரியில் படிக்கும் அதிதி ஆச்சார்யாவை ஒருதலையாக காதலிக்கிறார்.

ஆனால் அதிதியோ ஃபேஸ்புக் மூலமாக நட்பாகும் ஒரு இளைஞனை காதலிக்கிறார். தனது மேல் படிப்புக்காக உதவி செய்வான் என்று முகமே பார்த்திராத அவனை நம்பி சென்னைக்கு வருகிறாள்.

வந்த இடத்தில் அவனை சந்திக்க முடியாமலே போய் விட, டாக்டர் ரகுமான் வீட்டிலேயே அவர் அழைப்பின் பேரில் தங்குகிறார். அவளது மேல்படிப்புக்குத் தேவையான உதவிகள் எல்லாவற்றையும் தானே முன் வந்து செய்கிறார்.

அந்த பாசத்தின் பின்னணியில் தன்னை ரோஹித் என்ற பெயரில் சென்னைக்கு வரவழைத்து காதலிப்பதே அவர் தான் என்கிற உண்மை தெரிய வருகிறது.

இந்த லவ் ட்ராக் ஒருபுறமிருக்க, இன்னொரு புறம் மற்றொரு ஹீரோ சுரேஷ் தான் வேலை பார்க்கும் கம்பெனியிலேயே வேலை செய்யும் தேவிகாவை காதலிக்கிறார். அவரோ இன்னொரு கம்பெனியில் நல்ல சம்பளம் கிடைக்கவும் இவனை கழட்டி விட்டு விடுகிறார். இதனால் போதைக்கு அடிமையாகி, மனநிலை பாதிக்கப்படும் அவர் ரகுமானிடம் மருத்துவம் பார்க்க வருகிறார்.

ரகுமானோ தான் பின் தொடர்வதை தெரிந்து கொண்ட அதிதி ஆச்சாரியாவை கொலை செய்ய நினைத்தாலும் அவள் மீது வைத்திருக்கும் அதிக பாசத்தினால் அந்த பாவத்தை தான் செய்யாமல் தன்னிடம் மருத்துவம் பார்க்க வரும் ஹீரோ சுரேஷை பயன்படுத்தி கொலை செய்ய நினைக்கிறார்.

ரகுமான் விரித்த அந்த வஞ்சக வலையிலிருந்து அதிதியும், சுரேஷும் தப்பித்தார்களா? இல்லையா? என்பதே கிளைமாக்ஸ்.

ரகுமான் கமிட் செய்கிற படங்கள் எல்லாம் ஏதோ பத்தோடு பதினொன்றாக இருப்பதில்லை, ஏதோ ஒரு வகையில் நம்மை ரசிக்க வைத்து விடும் என்பதற்கு இந்தப்படமும் ஒன்று சான்று. ஒரு சைக்காலஜி த்ரில்லரை அருமையான சைக்கோ த்ரில்லராகவும் தந்திருக்கிறார்கள்.

போலீஸ் கேரக்டரோ, மனோதத்துவ டாக்டரோ எந்தக் கேரக்டராக இருந்தாலும் அதற்கான காஸ்ட்யூமைப் போட்டவுமே அதுவாகவே மாறி விடுவது தான் ரகுமானின் மிகப்பெரிய பிளஸ்.

அந்த வகையில் இந்தப் படத்தில் ஒரு மனோதத்துவ டாக்டருக்கான மென்மையான அணுகுமுறையை அப்படியே வெளிப்படுத்தியிருக்கிறார். அதே சமயம் தான் பாடம் சொல்லிக் கொடுத்த கல்லூரி மாணவியையே காதலிக்கத் தொடங்கவும் மாறும் அவரது போக்கு சைலண்ட்டான வில்லத்தனம்.

ஒரு பக்கம் அதிதி மீதான தன் காதலை சொல்லவும் முடியாமல், அவள் மீதான அதீத அன்பில் அவளை கொலை செய்யவும் மனம் வராமல் துடிக்கிறார், கிளைமாக்ஸில் பரிதாபத்தை அள்ளிக் கொள்கிறார்.

வசீகரிக்கும் கண்களுடன் இளமை துள்ள படத்தில் வருகிறார் அதிதி ஆச்சாரியா. படத்தின் இடைவேளை வரை மெதுவாக நகரும் திரைக்கதை ரோஹித்தாக நடித்து நம்மை ஏமாற்றிக் கொண்டிருப்பது ரகுமான் தான் என்று அதிதிக்கு தெரிய வரவும் அவர் அவருக்கு பாடம் கற்பிக்க எடுக்கும் முயற்சிகளால் படம் விறுவிறுப்பாக செல்ல ஆரம்பிக்கிறது.

ரகுமான் – அதிதி ஆச்சாரியாவைச் சுற்றியே மெயின் கதை நகர்வதால் இன்னொரு காதல் ஜோடிகளாக வரும் சுரேஷ், தேவிகாவின் பங்களிப்பு படத்தில் இடைச்செருகலாகத்தான் தெரிகிறது. அவர்களின் போர்ஷனை வெட்டிப் போட்டிருந்தால் கூட குறையொன்றுமில்லை.

டெல்லி கணேஷ், மீரா கிருஷ்ணன், சுவாமிநாதன், சாம்ஸ், பாலாஜி, பாண்டு ஆகியோர் வழக்கமான தனது இருப்பை காட்டியிருக்கிறார்கள்.

சரவண பாண்டியனின் ஒளிப்பதிவு பலம். பிரேம்குமார் சிவபெருமானின் இசை வழக்கமானது.

ரகுமான் எதற்காக அதிதி ஆச்சாரியா மீது இவ்வளவு தூரத்துக்கு வெறித்தனமான காதலில் விழுகிறார் என்கிற காரணத்தை முழுமையாகவும், அழுத்தமாகவும் சொல்லாமல் விட்டிருக்கிறார்கள். இருந்தாலும் வழக்கமான த்ரில்லர் படமாக இல்லாமல் ஃபேஸ்புக் விபரீதம், மனநலச் சிக்கல்கள் என கொஞ்சம் புதிதாக யோசித்து, அதிகம் குற்றம் குறை சொல்ல முடியாத திரைக்கதையின் மூலம் சபாஷ் போட வைத்திருக்கிறார் இயக்குநர் செந்தில் நாடன்.