பாயும்புலி – விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

Paayum-Puli-1

தொடர் தோல்விகளை சந்தித்து வந்த விஷாலுக்கு பாண்டியநாடு படம் மெகா ஹிட் மிகப்பெரிய திருப்புமுனை யாக அமைந்தது. அப்படத்தின் இயக்குநர் சுசீந்திரனின் காம்பினேஷனில் மீண்டும் ரிலீசாகும் படமென்பதால் பாயும்புலிக்கு வழக்கத்தை விட கூடுதல் எதிர்பார்ப்பு.

மதுரையில் கொலை, கொள்ளை, கிரானைட், மணல் கடத்தல், ஆள் கடத்தல் என எல்லாவித அட்டூழியங்களையும் செய்பவன் பவானி.

அப்படிப்பட்டவன் திடீரென்று ‘பசையுள்ள’ தொழிலதிபர்களுக்கு போனைப் போட்டு மிரட்டி கோடிக்கணக்கில் பணம் கேட்க ஆரம்பிக்கிறான். உயிருக்கு பயப்படும் தொழிலதிபர்கள் பணத்தை கொட்ட விவகாரம் போலீஸ் வரை சென்று சீரியஸாகிறது.

அந்தக் கும்பலை ஆனந்தராஜ் தலைமையிலான போலீஸ் கைது செய்யும் முயற்சிக்க, அந்த முயற்சியில் எஸ்.ஐ ஹரீஸ் உத்தமனை ரெளடிக்கும்பல் கொலை செய்கிறது.

இதனால் அந்த ரெளடிக்கும்பலை ஒழித்துக் கட்ட திருச்சியில் இருக்கு விஷால் தலைமையிலான ஒரு ரகசிய போலீஸ் டீம் மதுரைக்கு வருகிறது.

போலீசைப் பார்த்ததும் எப்படி பொதுமக்களுக்கு நம்பிக்கை வருதோ? அதே மாதிரி போலீசைப் பார்த்ததும் ரெளடிகளுக்கு பயம் வரணும் என்று சபதம் செய்து கொண்டு கண்ணில் படுகிற ரெளடிக்கும்பலைச் சேர்ந்தவர்களை எல்லாம் எண்கவுண்டரில் போட்டுத் தள்ளுகிறார் விஷால்.

அதில் ஒருவன் அப்ரூவராக மாற, அந்த ரெளடிக்கும்பலை விஷால் ஒழித்துக் கட்டினாரா? இல்லையா? என்பதே கிளைமாக்ஸ்.

சுசீந்திரன் படமென்றாலே பெரிய பில்டப்புகள் எல்லாம் இருக்காது. அவருடைய திரைக்கதை பலமே எவ்ளோ சீரியஸாக கதையையும் சாதாரண ரசிகரையும் ஈர்க்கும் விதம் எளிமையாக காட்சிகளாக நகர்த்திக் கொண்டு போவது தான்! எந்தக் கதையாக இருந்தாலும் அதை ரசிகர்களை விதமாக ஈர்க்கும் குடும்ப உறவுகளின் உன்னத்தை மெயின் விஷயத்தோடு கலந்து திரைக்கதை அமைத்திருப்பார். அப்படி ஒரு எளிமை இந்தப் படத்திலும் தெரிகிறது.

எந்தளவுக்கு காட்சிகள் எளிமையோ, கதையும் அப்படி ஒரு எளிமையான கதை தான். ஆனால் அது பாண்டியநாடு அளவுக்கு வீரியம் இல்லாதது மட்டுமே பெருங்குறை. மற்றபடி சுசீந்திரன் படத்துக்கே உரிய அத்தனை அம்சங்களையும் தாங்கி வந்திருக்கிறான் இந்த பாயும் புலி.

போலீஸ் என்றால் ஹரி படங்களில் ஒரு மிதமிஞ்சிய வேகம் இருக்கும். கெளதம்மேனன் படங்களில் கொஞ்சம் ஸ்டைல் இருக்கும். சுசீந்திரன் படங்களில் எந்த பில்டப்புகளும் இருக்காது.

ஹீரோ விஷாலும் அப்படித்தான் வருகிறார். ஒரு சாதாரண போலீஸ் அதிகாரி போல எண்ட்ரி கொடுப்பவர் எண்கவுண்டர் காட்சிகளிலும், சண்டைக்காட்சிகளில் கூட அடக்கித்தான் வாசித்திருக்கிறார்.

ஹீரோயின் காஜல் அகர்வாலின் எண்ட்ரியே அப்படி ஒரு அழகான ஓவியம் போல காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். சிக்னலில் சாலையை கடக்க அவர் படும் பாட்டைப் பார்க்கும் போதும், டூவிலரில் யூ டர்ன் அடிக்க அவர் அடிக்கும் குட்டிக் கர்ணங்களும் ஜாலியான காதல் கலாட்டா.

தினமும் வீட்டுக்கு சரக்கடித்து விட்டுப் போகும் சூரி அதற்காக மனைவியிடம் வாங்கிக் கட்டிக்கொண்டதை ப்ளாபேக்காக சொல்லி சிரிக்க வைப்பதில் வெற்றி பெறுகிறார் சூரி.

அதிலும் பள்ளிக்கூட மாணவனுக்கு அண்ணனாக நடிக்கப் போய் ஓவர் டோஸ் போய் விடும் காட்சிகள் அப்படி ஒரு ரகளை. அந்தக் காட்சி மட்டும் ஏற்கனவே வடிவேலு நடித்த ஒரு காமெடிக் காட்சியை ஞாபகப்படுத்துகிறது.

சூசீந்திரனின் படங்களில் வழக்கமாக வரும் ஜெயப்பிரகாஷ், இதில் கேரக்டர் பெரிய அளவில் இல்லாதது ஆச்சரியம். விஷாலின் அண்ணனாக வரும் சமுத்திரக்கனிக்கு சண்டைக்காட்சிகளில் கூட சரிசமமாக அடித்துக் கொள்ளும் அளவுக்கு விஷாலுக்கு நிகரான கேரக்டர்.

ஒரு அரசியல்வாதியாக ஜெயித்தே ஆக வேண்டுமென்கிற வெறியில் அவர் செய்யும் செயல்பாடுகள் அதிர்ச்சி தரக்கூடியவை. ‘சுப்ரமணியபுரம்’ படத்துக்குப் பிறகு ஒரு கொடூர வில்லனாக சமுத்திரக்கனியை ரசிக்க முடிகிறது.

ஆர்.கே. தயாரிப்பாளர் டி.சிவா, அருள்தாஸ், அப்புகுட்டி, ஹரிஷ், பிரின்ஸ், வேல ராமமூர்த்தி, ஐஸ்வர்யா தத்தா என சின்னச் சின்ன கேரக்டர்களுக்கு கூட தெரிந்த முகங்களாக பயன்படுத்தியிருக்கிறார் சுசீந்திரன்.

தனது படங்களில் முடிந்த வரை யதார்த்தம் மீறாமல் பார்த்துக் கொள்ளும் சுசீந்திரன் சின்னச் சின்ன விஷயங்களில் கூட லாஜிக் மிஸ் ஆகாமல் பார்த்துக் கொள்வார்.

ஆனால் இதில் ரெளடிக்கும்பலைப் பிடிக்க உதவும் முக்கிய சாட்சியான வக்கீல் லாலை ஒரு டீ கொடுக்க வரும் சிறுவனை காவல் நிலைய உள் விசாரணை அறை வரைக்கும் அனுமதித்து சுட விடுவது மிகப்பெரிய லாஜிக் ஓட்டை.

டி.இமானின் இசையில் சிலுக்கு மரமே பாடல் மட்டுமே மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் ஒன்ஸ்மோர் ரகம். இதரப் பாடல்களில் புதுக்குரல்களை அறிமுகப்படுத்தி வசியம் செய்கிறார்.

தங்கள் சுயநலத்துக்காக எந்த லெவலுக்கும் இறங்க நினைக்கும் அரசியல்வாதிகளின் முகத்திரையை கிழித்து தனக்கே உரிய பேமிலி செண்டிமெண்ட், காமெடி, லவ் என ஒரு சீரியஸ் புலியாக பாய வைத்திருக்கிறார் சுசீந்திரன்.