”அந்த தப்பை மட்டும் செஞ்சிராத…” : விஜயலட்சுமிக்கு வந்த எச்சரிக்கை

Get real time updates directly on you device, subscribe now.

vijayalakshmi

னது காதல் கணவர் ஃபெரோஸ் இயக்கத்தில் ”பண்டிகை” படத்தை தயாரித்திருக்கிறார் இயக்குநர் அகத்தியனின் மகளும், நடிகையுமான விஜயலட்சுமி.

டீ டைம் டாக்கீஸ் தயாராகியிருக்கும் இப்படத்தில் கிருஷ்ணா, கயல் ஆனந்தி, சரவணன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். ‘ரங்கூன்’ படத்துக்கு இசையமைத்த விக்ரம் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார். ஆரா சினிமாஸ் வாங்கி வெளியிடும் இந்த படம் வரும் ஜூலை 7ஆம் தேதி வெளியாகிறது.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய ஹீரோ கிருஷ்ணா ”முதலில் ஃபெரோஸ் வேறு ஒரு கம்பெனிக்கு ஒப்பந்தமாகி இருந்தார். எனக்கு பொறாமையாக இருந்தது. அப்புறம்தான் ஒரு நாள் விஜயலட்சுமி என்னை ஹீரோவாக நடிக்க கூப்பிட்டார். என் வாழ்க்கையில் முதல் முறையாக முதல் பாதி இயக்குனர் ஃபெரோஸ் சொன்னார், இரண்டாம் பாதியை தயாரிப்பாளர் விஜயலட்சுமி சொன்னார். சிக்ஸ் பேக் எதுவும் வைக்க தேவையில்லை என ஃபெரோஸ் சொன்னார். வழக்கமாக நடிப்பது மாதிரி நடிக்க கூடாது என என்னை ரொம்ப டார்ச்சர் செய்து விட்டார். விஷ்ணுவர்தனுக்கு பிறகு என்னை அதிகம் டார்ச்சர் செய்தது ஃபெரோஸ் தான்.

நாயகிகளுக்கு கண்கள் எப்போதுமே அழகு. ஆனந்திக்கும் அது பெரிய பிளஸ். மாயா வரைக்கும் மகேஷ் பல படங்களை சிறப்பாக கொண்டு சேர்த்திருக்கிறார். இந்த படத்தையும் கொண்டு சேர்ப்பார் என நம்புகிறேன்” என்றார்.

அடுத்து பேசிய ஆரா சினிமாஸ் மகேஷ் ” பண்டிகை படத்தின் போஸ்டர், மற்றும் டீசர் பார்த்தவுடன் தயாரிப்பாளரிடம் பேசி இந்த படத்துடன் என் பயணத்தை துவக்கினேன். படத்தை வாங்கும் போது யாரும் போட்டுக் காட்ட தயங்குவார்கள். ஆனால் விஜயலக்‌ஷ்மி, ஃபெரோஸ் படத்தை போட்டுக்காட்டி, என் கருத்துக்களையும் ஏற்றுக் கொண்டனர். கிருஷ்ணாவின் கேரியரில் கழுகு, யாமிருக்க பயமேன் படங்கள் என்ன பெயரை பெற்றுத் தந்ததோ அதை இந்த படம் அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லும். ஃபெரோஸ் ஒரு ஸ்டைலிஷ் இயக்குனர். அவர் எங்கள் பேனருக்கு அடுத்த படத்தை இயக்கி தர வேண்டும். படத்தின் கதை மீது நம்பிக்கை வைத்து தயாரித்த விஜயலக்‌ஷ்மிக்கு பாராட்டுக்கள். படத்தை சிறப்பாக மக்களிடம் கொண்டு செல்ல எல்லா வேலைகளையும் செய்து வருகிறோம். படத்தின் மீது உள்ள நம்பிக்கையால் 2 அல்லது 3 நாட்களுக்கு முன்பே படத்தை பத்திரிக்கையாளர்களுக்கு திரையிட்டு காட்ட இருக்கிறோம் என்றார்.

Related Posts
1 of 7

பின்னர் பேசிய விஜயலட்சுமி தயாரிப்பாளராக தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை வெளிப்படையாகப் பகிர்ந்து கொண்டார்…

”நான் நடிக்க போகிறேன் என்று சொன்ன போது என் குடும்பம் உட்பட எல்லோரிடத்திலும் எனக்கு ஆதரவு இருந்தது. ஆனால், படம் தயாரிக்கப் போகிறேன் என்றதும் அந்த தப்பை மட்டும் செய்து விடாதே” என்று எச்சரிக்கை செய்தார்கள். ஆனால் என் கணவர் மீது எனக்குப் பெரிய நம்பிக்கை இருந்தது. அதனால் துணிச்சலோடு இப்படத்தை தயாரிக்க இறங்கி விட்டேன்.

இந்தப் படத்தின் ஹீரோ கிருஷ்ணா என் நண்பன், படத்தில் கடுமையாக உழைத்திருக்கிறான். கேரவன் கூட போகாமல் கஷ்டப்பட்டு நடித்திருக்கிறான். இந்த படத்தின் தொழில்நுட்ப கலைஞர்களிடையே ஒரு பெரிய போட்டியே இருந்தது. ஒவ்வொருவரும் சிறப்பான, தரமான படமாக கொடுத்திருக்கிறார்கள். எங்களை விட ஆரா சினிமாஸ் மகேஷ் தான் மிகவும் தன்னம்பிக்கையோடு உழைத்து வருகிறார். இந்த படம் ரிலீஸுக்கு பிறகு இன்னும் 4 படங்கள் தயாரிக்க ஆசை என்றார் தயாரிப்பாளர் விஜயலக்‌ஷ்மி.

”நிறைய ஹீரோக்களிடம் கதையை சொல்லியிருக்கிறேன், எல்லாம் ஓகே ஆனாலும் படத்தை தொடங்கவே முடியவில்லை. அப்போது தான் படத்தை நாங்களே தயாரிக்க முடிவு செய்தோம். கிருஷ்ணா, ஆனந்தி, சரவணன் தான் இந்த கதைக்கு வேண்டும் என முன்பே முடிவு செய்தேன், அது சாத்தியமானது. தெரு சண்டையை மையமாக கொண்ட கதை என்பதால் ஸ்டண்ட் மாஸ்டரின் வேலை ரொம்பவே முக்கியத்துவம் வாய்ந்தது, அதை அன்பறிவ் சிறப்பாக செய்து கொடுத்தனர். படத்தை முழுதாக பார்ப்பதற்கு முன்பே நம்பிக்கை வைத்து ஒரு பெரிய தொகையை முதலீடு செய்த ஆரா சினிமாஸ் மகேஷ் சாருக்கு நன்றி. படத்தை அவர் சிறப்பான முறையில் மக்களிடம் கொண்டு சேர்ப்பார் என நம்புகிறேன்.

நிறைய பேர் டீசர், டிரைலர் பார்த்து விட்டு ஃபைட் கிளப் படத்தின் காப்பியா என கேட்கிறார்கள். இது தெரு சண்டையை மையமாக வைத்து சென்னையை கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்ட கதை. சென்னை அண்ணா நகரில் நான் பார்த்த இரண்டு கேங் சண்டை போடுவார்கள். அவர்கள் எதிர்கள் கிடையாது, சண்டை முடித்து விட்டு நண்பர்களாக கிளம்பி செல்வார்கள். அதை நான் பார்த்திருக்கிறேன். அது தான் இந்த கதைக்கு இன்ஸ்பிரேஷன் என்றார் இயக்குனர் ஃபெரோஸ்.

டைட்டிலில் தெரிகின்ற உற்சாகம் படம் பார்க்கும் ரசிகர்களுக்கும் முழுமையாகக் கிடைக்கும் என்று நம்பலாம்!