பாரிஸ் ஜெயராஜ்- விமர்சனம்

எப்பவாவது பஞ்ச் பேசினால் சிரிக்கலாம்..எப்பவும் பஞ்ச் பேசினால்…அட ஏன்? அப்படித் தோணும்ல? அந்தத் தோணுதலை பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் படம் நெடுக டைமிங் டயலாக்குகளையும், பஞ்ச் வசனங்களையும் வைத்து தள்ளி இருக்கிறார்கள் பாரிஸ் ஜெயராஜ் அன்ட்&கோவினர். ஒரு வகையில் மிக சாதாரணமான இப்படத்தின் கதையை அந்த வசனங்கள் தான் தள்ளியும் கொண்டு போகிறது.

பாரிஸ் ஜெயராஜ் சந்தானம் ஜான்சன் கூட்டணியின் இரண்டாவது படம். முதல் படத்தில் கோட்டைத் தொட்ட கூட்டணி இரண்டாம் படத்தில் கோட்டை விட்டுள்ளது. கானா பாடகரான சந்தானத்திற்கு ஒரு காதல் தோல்வியில் முடிகிறது. அடுத்ததாக கல்லூரி மாணவி அனைகா சோட்டியோடு காதல் வருகிறது. இந்தக்காதலுக்கு வில்லனாக இருப்பது சந்தானத்தின் தந்தையும் அனைகா சோட்டியின் தந்தையும் தான். இருவரின் தந்தையும் ஒன்றென்று இருவருக்கும் க்ளைமாக்ஸில் தெரியவந்தால் என்னவாகும்? இதுதான் படத்தின் கதை!

பழகிய கதையாக இருந்தாலும் பழைய பார்மட்டில் எடுக்காமல் ஓரளவு தேற்ற முயற்சித்திருக்கிறார்கள். சந்தானம் வழக்கம் போல் பஞ்ச் பேசுகிறார். கண்ணில் படும் அனைவரையும் கலாய்க்கிறார். விட்டால் படம் பார்க்கும் நம்மையும் கலாய்த்து விடுவார் போல! நாயகி அனைகா சோட்டியோட நடிப்பு கதைக்கு எந்த உதவியும் செய்யலன்னும் சொல்லலாம்…இல்லை அவருக்கு கதை எந்த உதவியும் பண்ணலன்னும் சொல்லலாம். சந்தானத்தின் அப்பாவாக வரும் ப்ரித்விராஜ் ஓரளவு ஈர்க்கிறார். மொட்டைராஜேந்திரன் பழைய ஜோக் தங்கத்துரை உள்பட சந்தானம் டீம் யாவரும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளார்கள்.

சந்தோஷ் நாராயணின் இசையில் கானா பாடல்கள் எல்லாம் பெரிதாக ஆர்வத்தை தூண்டவில்லை. ஒரு இடத்தில் எஸ்.பி.பி யை சந்தானம் இமிடேட் செய்திருப்பது சற்று கோபமாக கூட இருந்தது.படத்தின் மெயின் ட்விஸ்ட் படத்தின் லீட் கேரக்டர்களுக்கு கடைசியில் தான் தெரிய வருகிறது என்பது திரைக்கதையின் பலம் தான். ஆனால் அதை பலவீனமான காட்சிகளால் வீணடித்திருக்கிறார்கள். லாஜிக் என்பது மருந்துக்கும் இல்லை..மறந்து கூட அதைப்பற்றி இயக்குநர் யோசிக்க வில்லை போல.பட் இப்படியான குறைகளையும் தாண்டி படம் பல இடங்களில் சிரிக்க வைத்துள்ளது என்பதும் உண்மை.

2.75/5