பழைய வண்ணாரப்பேட்டை – விமர்சனம்
RATING : 3/5
வடசென்னையை கதைக்களமாகக் கொண்டு எத்தனையோ படங்கள் அடுத்தடுத்து வந்து கொண்டுதான் இருக்கின்றன. என்றாலும் ஒவ்வொன்றும் வட சென்னையின் ஒவ்வொரு இயல்பை விறுவிறுப்பாக காட்டுகின்றன.
அந்த லிஸ்ட்டில் பொய் கேஸ் ஒன்றில் தன் நண்பனை பலிகடாவாக்க முயற்சிக்கும் மோசமான போலீசுக்கு எதிராகவும், அவர்களுக்காக உதவத்துடிக்கும் ஒரு நல்ல போலீசுக்குமிடையையான ரோட் சைட் ரேஸ் தான் இந்த ”பழைய வண்ணாரப்பேட்டை.”
வட சென்னையின் முக்கிய ஏரியாவான பழைய வண்ணாரப்பேட்டையில் இடைத்தேர்தல் நடக்கப்போகிற சூழலில் எதிர்க்கட்சியைத் சேர்ந்த இரண்டு அரசியல் பிரமுகர்கள் பார் ஒன்றில் ஒரு கும்பலால் வெட்டப்படுகிறார்கள்.
எந்த சம்பவமாக இருந்தாலும் 21 மணி நேரத்தில் குற்றவாளியை கண்டுபிடித்து விடும் அந்த ஏரியாவைச் சேர்ந்த போலீஸ் அதிகாரிக்கு இது கடும் நெருக்கடியைக் கொடுக்கிறது. உடனே பாரில் கொலை நடந்த சமயத்தில் இருந்த அத்தனை பேரையும் போலீஸ் சந்தேக கேஸில் பிடித்துச் செல்கிறது. அதில் லோக்கல் ரவுடிகளோடு ஹீரோ பிரஜன், நிஷாந்த் உட்பட நண்பர்களும் மாட்டிக்கொள்கிறார்கள். நேரம் செல்லச் செல்ல குற்றவாளி சிக்காததால் பிரஜனின் நண்பர்களில் ஒருவனை மட்டும் போலீஸ் பிடித்து வைத்துக் கொள்ள, மற்றவர்கள் வெளியே வருகிறார்கள். இதனால் அதிர்ச்சியடையும் பிரஜன் லோக்கல் ரவுடியான நிஷாந்த்தின் துணையுடன் நண்பனை காப்பாற்ற கிளம்புகிறார்.
இன்னொரு பக்கம் கொலைக்கேஸில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் இளைஞனுக்கும் கொலை முயற்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தெரிய வரவும் நேர்மையான போலீஸ் அதிகாரியான ரிச்சர்ட் அந்த இளைஞனைக் காப்பாற்ற தன் பக்கத்திலிருந்து கொலைக்குற்றவாளியைத் தேடுகிறார்.
குற்றவாளியை முதலில் நெருங்கியது யார்? போலீசின் சட்டவிரோத காவலில் இருக்கும் நண்பனை ஹீரோ பிரஜன் மீட்டாரா? என்பதே கிளைமாக்ஸ்.
வட சென்னையின் ஒவ்வொரு அங்குலத்திலும் சுவாரஷ்யம் கொட்டிக்கிடக்கிறது என்பதற்கு இப்படத்தின் விறுவிறுப்பான திரைக்கதை நகர்வும், காட்சியமைப்புகளுமே சான்று.
ஹீரோவாக பிரஜன் ஒரு நல்ல கதையின் கச்சிதமான கேரக்டர் கிடைத்திருக்கிறது. அவர் மட்டுமல்ல, அவருடன் சேர்ந்து வருகின்ற நண்பர்களும் வட சென்னை இளவட்டங்களின் மன உணர்வுகளை நடிப்பில் பிரமாதமாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இந்த மாதிரியான கதைக்கு நிஷாந்த் சரியாகப் பொருந்துகிறார். அந்த வகையில் மெட்ரோ படத்துக்குப் பிறகு இந்தப்படத்திலும் நடிப்பில் ஸ்கோர் செய்கிறார்.
காவல்துறையில் இருக்கின்ற ஒரு சில நேர்மையான அதிகாரிகளில் ஒருவராக வருகிறார் ரிச்சர்ட். கொலை முயற்சிக்கு சம்பந்தமே இல்லாத ஒரு அப்பாவி இளைஞனின் எதிர்காலம் பாழாகிவிடக்கூடாதே என்பதில் தெரிகிற அக்கறை அந்தக் கொலைக்குற்றவாளியை அவர் தேடிப்போகிற ஒவ்வொரு நிமிடத்திலும் வெளிப்படுகிறது. காக்கி உடையில் அவர் காட்டுகிற கம்பீரம் சண்டைக்காட்சியிலும் முழுமையாக வெளிப்பட்டிருக்கிறது.
நாயகியாக வருகிறார் அஷ்மிதா. அவ்வளவு அழகு இல்லை. நடிப்பில் ஸ்கோர் செய்யவும் பெரிதாக காட்சிகள் இல்லை.
பாடகர் வேல்முருகன், கூல் சுரேஷ், கருணாஸ், கானாபாலா, ரோபோ சங்கர், காஜல், டான்ஸர் ஜானி என ரசிகர்களுக்கு பரிச்சயமான முகங்களும் அவ்வப்போது வந்து போகிறார்கள். ஆனாலும் மனசில் நிற்கிறார்கள்.
ஜூபினின் இசையில் பின்னணி இசையும் “பழைய வண்ணாரப்பேட்டை… ‘, ‘உன்னத்தான் நினைக்கையில .. ‘, ‘காத்திருந்த பொண்ணு …’, என படத்தில் இடம்பெற்றிருக்கும் பாடல்களும் காட்சிகளோடு சேர்த்து ரசிக்க வைக்கின்றன.
பழைய வண்ணாரப்பேட்டையின் மொத்த அழகையும் தனது கேமராவில் படம் பிடித்து ப்ரெஸ்ஸாக தந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் பாருக்.
அரசியல் கொலைகளுக்காக அதிகார மட்டத்தில் காட்டப்படும் கெடுபிடிகளில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள காவல்துறை அப்பாவி இளைஞர்களை எப்படியெல்லாம் குற்றவாளி ஆக்க முயற்சிக்கிறார்கள் என்பதை மிகவும் விறுவிறுப்பான திரைக்கதையுடன் இயக்கித் தந்திருக்கிறார் இயக்குநர் மோகன் ஜி.
பழைய வண்ணாரப்பேட்டை – இன்னொரு ‘வட சென்னை’ வெற்றி!