பொங்கலுக்கு வரும் ‘பேட்ட’! – ரஜினி பராக் பராக்…
‘காலா’ படத்தைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் படம் ‘பேட்ட’.
சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்தில் ரஜினி ஹாஸ்டல் வார்டனாக வருகிறார். மேலும் சிம்ரன், த்ரிஷா, விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்து ரிலீசுக்கு தயாராகியிருக்கும் இப்படம் ஜனவரி 2019 பொங்கலுக்கு வெளியாகும் என்று சொல்லப்பட்டது. ஆனால் அன்றைய தினம் அஜீத் நடித்த விஸ்வாசம் படமும் ரிலீஸ் உறுதி செய்யப்பட்டதால் இரண்டு பெரிய படங்களுக்கும் தியேட்டர்களை பிரிப்பதில் சிக்கல் வரும் என்பதால் பேட்ட படம் தள்ளிப்போகும் என்று கோடம்பாக்கத்தில் பேசப்பட்டது.
ஆனால் தற்போது பேட்ட படம் பொங்கலுக்கு வருவது உறுதி என்று சன் பிக்சர்ஸ் சார்பில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று வெளியிடப்பட்ட பேட்ட படத்தின் புதிய போஸ்டரில் படம் பொங்கலுக்கு ரிலீஸ் என்பது உறுதியாகியிருக்கிறது.
விஸ்வாசம் படமும் பொங்கலுக்கு ரிலீஸ் உறுதியாகியிருப்பதால் ரஜினி – அஜீத் படங்கள் ஒரே நாளில் மோதுவது இருவருடைய ரசிகர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.