‘வருங்கால முதல்வர் அஜித்’ : அப்படியெல்லாம் அவசரப்பட்டு வார்த்தையை விட்றாதீங்கப்பா…

தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு அந்த ‘இரும்பு பெண்மணி’யின் நாற்காலி யாருக்கு? என்கிற கேள்வி தான் இப்போதைக்கு தமிழ்நாட்டு மக்களின் மனதை துளைத்தெடுக்கின்ற கேள்வியாக இருக்கிறது.
ஜெ., இறந்த டிசம்பர் 5-ம் தேதி இரவோடு இரவாக பன்னீர் செல்வம் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டாலும் அவர் வேகம் ஊரறிந்தது தான்.
இந்த பரபரப்புச் சூழலில் தான் பல்கேரியாவில் படப்பிடிப்புக்காக சென்றிருந்த நடிகர் அஜித் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்துவதற்காகவே மெனக்கிட்டு ப்ளைட்டை பிடித்து சென்னை வந்தார்.
வந்தவர் தனது மனைவி ஷாலினியுடன் அதிகாலை 4 மணிக்கு சென்று ஜெ சமாதிக்கு அஞ்சலி செலுத்தினார். ஜெ மீது அளவற்ற அன்பும் மரியாதையும் கொண்டவர் என்பதால் அஜித் அதற்காகவே வந்தார் என்பது ஒருபுறமிருக்க, அஜித்தின் வருகையை மலையாள, தெலுங்கு, கன்னட கூடவே சில ஹிந்தி ஊடகங்களும் அவர் தான் அதிமுகவை வழி நடத்தப்போகிற அடுத்த தலைவர் என்று கூசாமல் கொளுத்திப் போட்டன.
இந்தச் செய்தி சமூகவலைத்தளங்களில் வைரலாகவும் அஜித் ரசிகர்களுக்கு தலை கால் புரியவில்லை. ”வருங்கால முதல்வரே…” ”தமிழகத்தின் தலைமகனே…” என்றெல்லாம் புகழ்பாடிக் கொண்டிருக்கிறார்கள்.
அப்படிப்பட்ட அஜித் அபிமானிகளுக்கு அஜித் தரப்பிலிருந்தே ஒரு விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
என்ன?
ஜெயலலிதாவின் தைரியமும், பண்பும் அஜித்துக்கு ரொம்பவே பிடிக்கும். அவருக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்த வேண்டுமென்கிற எண்ணத்திலேயே அஜித் பல்கேரியாவிலிருந்து கிளம்பி வந்தார். ஆனால் அவரது சமாதிக்கு மட்டுமே அஞ்சலி செலுத்த முடிந்தது.
மற்றபடி அஜித்துக்கு எந்த காலத்திலும் அரசியலில் ஈடுபடும் எண்ணம் இருந்ததில்லை. இந்த விவகாரத்தில் எப்படி அஜித்தின் பெயரை சேர்த்தார்கள் என்பதே புரியவில்லை என்கிறது தல தரப்பு.
கேட்டுக்கிட்டீங்களா..?
இனிமே ‘வருங்கால முதல்வர் அஜித்’துன்னு அவசரப்பட்டு வார்த்தையை விட்றாதீங்கப்பா…