பொன்னியின் செல்வன்- விமர்சனம்
எம்.ஜி.ஆர் துவங்கி கமல் வரை எடுக்க ஆசைப்பட்ட கதை அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் கதை. அது மணிரத்னத்திற்கு வாய்த்திருக்கிறது.
சுந்தரச் சோழரின் இருமகன்களான ஆதித்ய கரிகாலன் காஞ்சியிலும், பொன்னியின் செல்வன் இலங்கையிலும் சோழக்கொடியை பறக்க விடும் வேட்கையில் இருக்கிறார்கள். அவர்கள் அருகில் இல்லாததைப் பயன் படுத்தி சோழ நாட்டுக்கு வேறு அரசனை கொண்டு வர பெரிய பழுவேட்டையர் தன் இளம்மனைவி நந்தினியோடு சேர்ந்து சதிமுடிவு எடுக்கிறார். இந்த சூழ்ச்சி பற்றி அறியும் ஆதித்ய கரிகாலன் தன் நண்பன் வந்தியத்தேவனை சோழநாட்டுக்கு அனுப்புகிறார். சோழநாட்டுக்குச் செல்லும் வந்தியத்தேவன் அங்கு சுந்தரச்சோழருக்குத் தெரியாமல் நடக்கும் சூழ்ச்சியை அவரிடம் சொல்லிவிட்டு, அவரின் மகளான குந்தவையிடம் சில தகவல்களை சொல்லி வாங்கிவிட்டு (அப்படியே காதலையும்) பொன்னியின் செல்வனை அழைத்து வர கிளம்புகிறான். சோழ நாட்டுக்குழப்பம் எப்படி தீர்ந்தது என்பதே மீதிக்கதை!
வந்தியத்தேவனில் இருந்து தான் நாவலின் கதை துவங்கும். படத்தில் ஆதித்ய கரிகாலனின் கட்டளையில் இருந்து துவங்கிறது. ஆனாலும் வந்தியத்தேவனால் தான் கதை நகர்கிறது. அந்த வகையில் நாவல் கதைக்கு படக்கதையில் நியாயம் செய்துள்ளார் மணிரத்னம். வந்தியத்தேவனாக கார்த்தி, சண்டை, காதல், துள்ளல், குறும்பு என அதகளம் செய்திருக்கிறார். சில இடங்களில் அவரது குறும்புத்தனம் வரலாற்றுப் படத்தை பார்க்கிறோம் என்பதை மறக்கச் செய்துவிடுகிறது. ஆதித்ய கரிகாலனாக விக்ரமின் கம்பீரம் படத்தையே கம்பீரமாக்குகிறது. பொன்னியின் செல்வனாக ஜெயம்ரவி குறைவான நேரமே வந்தாலும் கதையின் சாரமே அவர் தான் என்பதால் அசத்தி விடுகிறார். நந்தினியாக ஐஸ்வர்யா ராஜ் பவுண்டரி அடித்தால், குந்தவையாக திரிஷா சிக்சர் அடிக்கிறார். சரத்குமார் பெரிய பழுவேட்டரையர் பாத்திரத்திற்கு பக்காவாக பொருந்தியிருக்கிறார். சுந்தரச்சோழராக பிரகாஷ் ராஜ் படுக்கையிலேயே கிடந்தாலும் அக்கேரக்டருக்கு உயிர் கொடுக்கிறார். பார்த்திபன், பிரபு, ரகுமான், விக்ரம் பிரபு, கிஷோர், என நிறைய நடிகர்கள் இருக்கிறார்கள். அவர்களை சரியவர பயன்படுத்தவில்லை. அந்த வரிசையில் ஜெயராம் இல்லை என்பது ஆறுதல்
பொன்னியின் செல்வனின் ஆகப்பெரும் பலம் டெக்னிக்கல் டீம் தான். ஏ.ஆர் ரகுமான் இசையில் பாட்டும் BGM-ம் தெறிக்கிறது. இளையபிராட்டி குந்தவையும், சதிராணி நந்தினியும் சந்திக்கும் காட்சி ஒன்றில் ஏ.ஆர் செம்ம ஸ்கோர். ரவிவர்மனின் ஒளிப்பதிவால் பொன்னியின் செல்வனின் வரலாற்று களங்களை அழகாக ரசிக்க முடிகிறது. தோட்டாதரணியின் கலை இயக்கம் மலைக்க வைக்கும் அளவில் இருக்கிறது. சி.ஜி டீமும் நன்றாக உழைத்துள்ளார்கள்.
நாவல் நமக்குள் ஆழமாக ஏற்படுத்திய கேரக்டர்ஸ் பிணைப்பை படம் ஏனோ ஏற்படுத்தவில்லை. கேரக்டர்களின் அந்தியத்தன்மை நம்மைச் சற்று அயர்ச்சி அடையச் செய்கிறது என்பதே வருத்தமான நிஜம். பட நகர்விலும் ஆங்காங்கே இருக்கும் தொய்வும் சுட்டப்பட வேண்டிய ஒன்று. ஆனாலும் தமிழ் சினிமாவில் இப்படியொரு பிரம்மாண்ட முயற்சி நடந்திருப்பது ஆரோக்கியமான விஷயம். மேலும் நடிகர்கள்&தொழில்நுட்ப கலைஞர்களின் பேருழைப்புக்காகவே ஒருமுறை பார்க்கலாம்
3.5/5
#PonniyinSelvan1 #பொன்னியின் செல்வன்