போட்டாச்சு ரெட்! : இனி படமே இயக்க முடியாதாம் கார்த்திக் சுப்புராஜ்!
பெண்களை தாங்கிப் பிடிப்பது இருக்கட்டும், ஆனால் எங்கள் தயாரிப்பாளர் இனத்தையே கேவலப்படுத்தி விட்டதே என்று தயாரிப்பாளர்கள் கொந்தளிப்பு ‘இறைவி’ படத்துக்கு எதிராக திரும்பியிருக்கிறது.
படத்தைப் பார்த்த தயாரிப்பாளர்களில் ஒருவரான சுரேஷ் காமாட்சி இறைவி படத்துக்கு எதிராக குரல் கொடுக்க, அதைத் தொடர்ந்து பல தயாரிப்பாளர்களும் கார்த்திக் சுப்புராஜூக்கு எதிராக அணி திரண்டு விட்டனர்.
படத்தில் எவ்வளவு தூரத்துக்கு தயாரிப்பாளர்களை கேவலப்படுத்த முடியுமோ? அவ்வளவு தூரத்துக்கு கார்த்திக் சுப்புராஜ் கேவலப்படுத்தியிருக்கிறார் என்பது தான் தயாரிப்பாளர்களின் கர்ஜனை.
நான்கைந்து பேர் மட்டும் சொல்வதை வைத்து எப்படி நம்புவது என்று யோசித்த தயாரிப்பாளர் சங்கம் உடனடியாக அப்படத்தை தயாரிப்பாளர் சங்கத்துக்கு ஸ்பெஷலாக போட்டுக் காண்பிக்கச் சொன்னார்கள்.
கடந்த சனிக்கிழமை சென்னையிலுள்ள ஆர்.கே.வி ஸ்டூடியோவில் இறைவி படத்தை 100க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் பார்த்திருக்கிறார்கள். பார்த்த அத்தனை பேரின் முகத்திலும் பேரதிர்ச்சி.
உடனடியாக கூடிய தயாரிப்பாளர் சங்கம் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பாளர்களை அவமதித்திருப்பது அப்பட்டமாகத் தெரிகிறது என்றும் இனி அவருடைய படங்களுக்கு தயாரிப்பாளர் சங்கம் எந்த வகையிலும் ஒத்துழைப்பு கொடுக்காது என்றும் அவரை வைத்து எந்த தயாரிப்பாளரும் படம் தயாரிக்கக் கூடாது என்று ஒருவேளை மன்னிப்பே கேட்டாலும் அவர் மீது ரெட் போடுவது தான் சரியானதாக இருக்கும் என்றும் ஒன்றுகூடி பேசி முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.
தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணு தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் இன்னொரு முக்கிய முடிவும் எடுக்கப்பட்டிருக்கிறதாம். அதாவது இறைவி படத்தில் நஷ்டம் ஏற்பட்டால் சொன்ன பட்ஜெட்டை விட அதிக செலவை இழுத்து விட்ட கார்த்திக் சுப்புராஜ் தான் அந்த நஷ்டத்தை தயாரிப்பாளர் சி.வி.குமாருக்கு தர வேண்டும் என்றும் தீர்மானம் போட்டிருக்கிறார்களாம்.
சட்டப்படி ஒருவர் தொழில் செய்யும் உரிமையை இன்னொருவரோ, ஒரு அமைப்போ தடுக்க முடியாது என்றாலும் தயாரிப்பாளர்களின் ஒத்துழைப்பு, இதர சங்கங்களின் ஒத்துழைப்பு கிடைத்தால் மட்டுமே கார்த்திக் சுப்புராஜ் தொடர்ந்து படங்களை இயக்க முடியும். அவர்களை சாராமல் தமிழ்சினிமாவில் ஒருவர் தனித்து நின்று படம் இயக்குவது என்பது கஷ்டம் தான்.
இந்த இக்கட்டான சூழலில் இருந்து எப்படி தப்பிக்கப் போகிறார் என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.