எம்.ஜிஆர் மனசு இப்போதுள்ள நடிகர்களுக்கு இல்லை : தயாரிப்பாளர் ஆவேசம்

Get real time updates directly on you device, subscribe now.

soora1

கொட்டித்தீர்த்த மழை வெள்ளம் மெல்ல மெல்ல வடிய ஆரம்பித்து விட்டது. ஆனால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்காக தமிழ்சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் கூட வெள்ள நிவாரணம் கொடுத்ததாகத் தெரியவில்லை.

இந்த விஷயம் நேற்று நடந்த ‘தென்னிந்தியன்’, ‘சூரத்தேங்காய்’ படங்களின் ஆடியோ ரிலீஸ் பங்ஷனிலும் எதிரொலித்தது.

ஆந்திராவின் வெள்ள நிவாரண நிதிக்கு கேட்காமல் கொடுத்த நடிகர், நடிகைகள் தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ள நிவாரணத்துக்கு தமிழ் நடிகர்கள் என்ன கொடுத்தார்கள் என்று ஆவேசமாகக் கேட்டார் கில்டு தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ஜாக்குவார் தங்கம்!

தொடர்ந்து அவர் பேசும்போது :

“இன்றைய சூழலில் ஒரே நேரத்தில் 2 படங்கள் தயாரித்துள்ள தயாரிப்பாளர் முத்துக்குமாரைப் பாராட்டுகிறேன். ‘கோலி சோடா’ சின்ன படம் தான். அது 40 கோடி லாபம் சம்பாதித்தது. சிறு படங்கள் வர வேண்டும். சில படங்களில் நடித்துள்ள ‘சூரத்தேங்காய்’ நாயகன் அரவிந்த் நன்றாகத்தான் இருக்கிறார். அவர் தமிழனாக இருப்பதால் மேலே வர முடியவில்லை. இது தான் நம் நாட்டு நிலைமை.

இங்கே இதைப் பேசக்கூடாது என்றிருந்தேன் ஆனால் பேச வேண்டியிருக்கிறது. ஆந்திராவில் புயல், வெள்ளம் வந்த போது எந்தெந்த நடிகர்கள் எவ்வளவு நிதி கொடுத்தார்கள் என்கிற பட்டியலைப் பார்த்தேன். இங்கே கோடி கோடியாக சம்பாதிக்கிறார்கள். நம் தமிழ்நாட்டில் நடிகர்கள் யார் எவ்வளவு கொடுத்தார்கள்? ஒன்றுமே இல்லை. இது வருத்தப்பட வேண்டிய விஷயம்.

தமிழ்நாட்டில் எல்லாம் இழந்து சொந்த நாட்டிலேயே தமிழ் மக்கள் அகதிகளாக இருக்கிறார்கள். நான் எம்.ஜி.ஆர். வீட்டிலேயே மூன்று ஆண்டுகள் இருந்திருக்கிறேன். அவர் அள்ளி அள்ளி கொடுத்தார். அவருக்குள்ள மனம் ஏன் இப்போது இவர்களுக்கு இல்லை? தயவு செய்து கொடுத்து உதவுங்கள் நீங்களும் உயர்வீர்கள். எங்கள் தயாரிப்பாளர் சங்கத்தில் சிறுபடங்கள் வளர்ச்சிக்கு பாடுபட்டு வருகிறோம். எப்எம்எஸ் என்கிற வகையில் 120 நாடுகளுக்கு நம் படங்கள் போகின்றன ஆனால் 10 லட்சம் கொடுத்து நம்மை ஏமாற்றிவிடுகிறார்கள். இது மாற நடவடிக்கை எடுப்போம்.” என்று கூறி படக்குழுவினரை வாழ்த்தினார்.

தயாரிப்பாளர் மாருதி பிலிம்ஸ் இண்டர் நேஷனல் முத்துக்குமார் பேசும்போது “இந்த விழாவே எங்களுக்கு வெற்றிவிழா தான். நான் இன்ஜினியரிங் பட்டதாரி இவருக்கு ஏன் படம் தயாரிக்கும் வேண்டாத வேலை என்று கேட்டார்கள் சின்ன வயதில் குழந்தை நடனம் ஆடும்போது அம்மா கை தட்டுவாள். கலை எல்லாருக்கும் மனசுக்குள் இருக்கும். சினிமாவுக்கு வரத் தனித்தகுதி தேவையா?

உலக உருண்டை தெரியாதவர்களுக்கும் ஏவிஎம் உருண்டை தெரியும். அப்படிப்பட்டது சினிமா ஆர்வம். நான் 1983ல் ‘இவர்கள் வருங்காலத்தூண்கள்’ போன்ற சில படங்களில் நடித்தேன் வெளிநாடு போனேன் தற்காப்புக் கலை கற்றேன். 5 வகை நடனம் கற்றேன். தேசிய அளவில் விருதுகூட பெற்றேன் 12 ஆண்டுகள் 3 படங்களுக்கு இணை தயாரிப்புப்பணி, ஐந்து படங்களில் தயாரிப்பில் என பங்கு பெற்றுள்ளேன்.

இளையராஜா சாரை வைத்துக் கூட படம் தயாரிக்கிறேன். இப்படி எனக்கு சினிமா அனுபவம் உள்ளது. பணம் இருந்தால் மட்டும் படம் தயாரிக்க முடியாது. சினிமா அனுபவமும் தேவை.இந்த ‘சூரத்தேங்காய்’ நேரடித் தமிழ்ப்படம். ‘தென்னந்தியன்’ மலையாளத்தில் வெற்றிபெற்ற படம். இரண்டையும் தயாரித்துள்ளேன். வெற்றிபெற ஆதரவு தாருங்கள்” என்றார்.