ஏ.ஆர்.முருகதாஸ் காலிங் : நிம்மதி பெருமூச்சி விட்ட பரத்!
காதல், வெயில், எம்டன் மகன் என தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து வந்த நடிகர் பரத் ஒரு கட்டத்துக்கு மேல் நடித்த படங்கள் எல்லாமே தோல்விப்படங்களாகி விட்டது. இதனால் புதுப்பட வாய்ப்புகளும் குறைந்து மூன்று நான்கு ஹீரோக்கள் நடிக்கின்ற படங்களில் கூட முக்கிய கேரக்டரில் நடிக்க ஆரம்பித்தார்.
இருந்தாலும் விட்ட மார்க்கெட்டைப் பிடிக்க ஒரு பெரிய இயக்குநர் நமக்கு கிடைக்க மாட்டாரா? என்று எதிர்பார்த்தவருக்கு ஏ.ஆர்.முருகதாஸின் அழைப்பு உச்சி குளிர வைத்திருக்கிறது.
‘அகிரா’ ஹிந்திப்படத்தை முடித்த கையோடு தமிழ், தெலுங்கு இருமொழிகளில் மகேஷ்பாபு நடிப்பில் பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமான படம் ஒன்றை இயக்கி வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். இந்தப்படத்தில் அசத்தலான வில்லன் கேரக்டரில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் பரத். படத்தில் வரும் இரண்டு வில்லன்களில் இன்னொருவராக எஸ்.ஜே சூர்யா நடிக்கிறார்.
விஷாலின் ‘செல்லமே’ படத்தில் வில்லன் கேரக்டரில் நடித்து தான் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி முன்னணி ஹீரோவானார் பரத். தற்போது மீண்டும் அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்திருப்பதால் இந்த ரவுண்ட்டில் கண்டிப்பாக ஜெயித்து விடலாம் என்று நம்பிக்கையோடு காத்திருக்கிறார்.
அப்படியே ஆகட்டும்!