நாமெல்லாம் பேசவே கூடாது தலைவரே : அப்படியே செய்தார் ரஜினி!

Get real time updates directly on you device, subscribe now.

rajini

500, 1000 ரூபாய் விஷயத்தில் முந்திரி கொட்டை போல முதல் ஆளாக ”மோடியின் செயல் புதிய பாரதத்தை உருவாக்கும்” என்று கருத்து சொன்னார் நடிகர் ரஜினிகாந்த்.

விவசாயிகள் போராட்டம், காவிரி நீர் பிரச்சனை, சென்னை வெள்ளம் என எந்த ஒரு விஷயத்திலும் இதுவரை மெளனராகமே பாடி வந்த ரஜினி திடீரென்று மோடியின் இந்த செயலுக்கு மட்டும் வாய் திறந்தால் அதனால் பாதிக்கப்பட்ட பெரும்பான்மை சமூகம் எப்படி அமைதியாக இருக்கும்?

அவ்வளவு தான், மனுஷன் பேசினாலும் சர்ச்சை, பேசாவிட்டாலும் சர்ச்சை என்றாகி விட்ட காலகட்டத்தில் அவர் பேசாமலேயே இருந்திருக்கலாம் என்கிற அளவுக்கு ரஜினியின் அந்த மோடி ஆதரவு கருத்துக்கு ஆளாளுக்கு பதிலடி கொடுத்து திட்டித் தீர்க்க ஆரம்பித்து விட்டார்கள்.

கறுப்புப் பணத்தையும், கள்ளப்பணத்தையும் ஒழித்துக் கட்டவே தான் இப்படி ஒரு நடவடிக்கையை எடுத்தேன் என்று பிரதமர் சமாதான அறிக்கை விட்டாலும், அவரின் செயலால் நாட்டில் பெரும்பான்மை பாதிக்கப்பட்டிருப்பது ஏழை, எளிய நடுத்தர மக்கள் தான்.

இயக்குநர் அமீர் கூட சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் ரஜினியை கண்டித்துப் பேசினார். சில அரசியல் கட்சித் தலைவர்களும் ரஜினியை கண்டித்தனர். அவ்வளவு ஏன் சில தினங்களுக்கு முன்பு வாட்ஸ் அப்பில் ”தலைவரே நான் உங்க ரசிகன் பேசுறேன்” என்று ஒரு குரல் பதிவு உலாவியது.

Related Posts
1 of 73

அதில் ”நமக்கு ஏன் தலைவரே இந்த வேண்டாத வேலையெல்லாம்? எதுக்கு கருத்து சொல்லணும், விவசாயிகள் போராட்டம் நடத்தினப்போ எதுவும் பேசினோமா? சென்னையில வெள்ளம் வந்தப்போ ஏதாவது செஞ்சோமா? இல்லேன்னா காவிரி விவகாரத்துல தான் ஏதாவது பேசினோமா? அப்பவெல்லாம் பேசாத நாம இப்ப மட்டும் எதுக்கு பேசணும் வேண்டாம் தலைவரே எல்லாரும் உங்களை கெட்ட கெட்ட வார்த்தையால திட்டுறாங்க. அதனால் நாமெல்லாம் பேசவே கூடாது தலைவரே” என்று ரஜினிக்கு அறிவுரை சொல்லும் விதமாக பரபரப்பை கிளப்பியது.

அது ரசிகரின் குரல் ரஜியின் செவிகளை எட்டியதோ? என்னவோ? அவரின் குரலுக்கு செவி சாய்க்கும் விதமாகவே இன்று நடந்து கொண்டார் ரஜினி.

ஆமாம், மும்பையில் நடைபெற்ற ‘2.0’ படத்தின் பர்ஸ்ட் லுக் விழாவில் கலந்து கொண்டு சென்னை திரும்பிய ரஜினியை விமான நிலையத்திலேயே மடக்கினர் நிருபர்கள்.

அப்போது ” 500, 1000 ரூபாய் நோட்டுகள் தடை குறித்தும், முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் குறித்தும், தமிழக அரசியல் சூழல் குறித்தும் அடுத்தடுத்து கேள்விகள் கேட்கப்பட்டது. அப்படி வந்த எந்த கேள்விக்கும் பதிலளிக்காமல் ”2.0 பர்ஸ்ட் லுக் விழா சிறப்பாக நடந்தது. என்னை விமான நிலையம் வரை வரவேற்க வந்த ரசிகர்களுக்கு நன்றி என்று மட்டும் சொல்லி விட்டு சிரித்துக் கொண்டே அமைதியாக சென்று விட்டாராம்.

இனிமே இப்படித்தான்!