கர்நாடகாவில் காலாவுக்கு சிக்கல்? – ரஜினி எடுத்த முக்கிய முடிவு!
பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘காலா’ திரைப்படம் வருகிற 7-ந்தேதி தமிழ்நாடு மற்றும் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது.
ரஜினி ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இப்படத்துக்கு கர்நாடகாவில் ரிலீஸ் செய்ய கடும் எதிர்ப்பு கிளம்பியது.
காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டுக்கு ஆதரவாக ரஜினி கருத்து தெரிவித்ததால் கர்நாடகத்தில் காலா படத்தை திரையிட லன்னடர் கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜிடம் கர்நாடக திரைப்பட வர்த்தக சபையும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.
இது சம்பந்தமாக கர்நாடக முதல்வரை அங்குள்ள திரைப்பட வர்த்தக சபை நிர்வாகிகள் சந்தித்து காலா படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று மனு கொடுத்தனர். ஆனால் குமாரசாமியோ இந்த விஷயத்தில் அரசு தலையிட முடியாது என்று தெரிவித்து விட்டார்.
இதற்கிடையே நடிகர் ரஜினிகாந்த் நேற்று பெங்களூர் சென்று காலா படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களை சந்தித்து ஆலோசனை நடத்தியிருக்கிறார். அப்போது படத்தை ரிலீஸ் செய்வது தொடர்பாக ஆலோசனைகள் வழங்கி அவர்களை சமாதானப்படுத்தினாராம்.
மேலும் ‘காலா’ படம் கர்நாடகாவில் வெளியாவது பற்றி கர்நாடக மக்கள் யோசிக்கட்டும், திரைப்பட வர்த்தக சபை இந்த பிரச்சனையில் முடிவு எடுக்கும், இதற்கு மேல் இதில் தான் ஒன்றும் சொல்வதற்கில்லை என்று தன் நெருங்கிய வட்டத்தில் தன் கருத்தை தெரிவித்திருக்கிறார்.
கர்நாடகத்தில் ‘காலா’ படம் வெளியாகாவிட்டால் அதை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு ரூ.10 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படும் என்பது விநியோகஸ்தர் வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது.