காலா – கரிகாலன் : தெறிக்க விட்ட ரஜினிகாந்த்தின் 164 வது பட டைட்டில்!

‘கபாலி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் பா. ரஞ்சித் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் 164 வது படத்தில் மீண்டும் இணைந்திருக்கிறார். தனுஷ் தயாரிப்பில் ‘தலைவர் 164’ என்று அழைக்கப்பட்டு வந்த இப்படத்துக்கு ‘காலா’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
மும்பை பின்னணியில் படமாக்கப்படும் இப்படத்தின் கதை முதலில் பிரபல தாதா ஹாஜி மஸ்தானின் கதை என்று சொல்லப்பட்டது. இதனால் ஹாஜி மஸ்தானின் வளர்ப்பு மகன் ரஜினிக்கு மிரட்டல் விடுத்தார். இதையடுத்து படம் ஹாஜி மஸ்தானை பற்றியது இல்லை என்று தயாரிப்பாளர் தனுஷ் தரப்பில் விளக்கம் தரப்பட்டு அந்தச் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
அதோடு இப்படத்தின் அதிகாரப்பூர்வ டைட்டில் இன்று காலை 10 மணிக்கு வெளியாகும் என்று நேற்று தனது ட்விட்டரில் அறிவித்தார் தனுஷ். அதன்படி ரஜினிகாந்த்தின் 164வது படத்துக்கு ‘காலா’ என்று டைட்டில் வைத்திருக்கிறார்கள்.
சிவப்பும், கருப்பும் கலந்த கலர் போஸ்டரில் கம்பீரமாக கர்ஜிப்பது போல வடிவமைக்கப்பட்டிருக்கும் டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மிரட்டுகிறது. அதேபோல காலா என்ற டைட்டிலின் கீழே ‘கரிகாலன்’ என்கிற சப் டைட்டிலும் இடம்பெற்றிருக்கிறது. அப்படிப்பார்த்தால் படத்தில் ரஜினியின் கேரக்டர் பெயர் கரிகாலன் என்று தெரிகிறது. அதன் பெயர் சுருக்கம் தான் காலாவாக இருக்கலாம் என்கிறார்கள்.
படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது ரஜினி ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தைக் கொடுத்தி்ருக்கிறது. இதனால் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை #Thalaivar #Kaala #Ranjith #Thalaivar164 #Rajinikanth என பல பெயர்களில் ஹேஷ்டேக்குகளை உருவாக்கி உலக அளவில் ட்ரெண்ட்டிங்கில் கொண்டு வந்து மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள். படப்பிடிப்பு இம்மாதம் 30-ம் தேதி சென்னையில் ஆரம்பமாகிறது.