முதல் சந்திப்பு மைலாப்பூரில்… – ஆன்மீக அரசியலுக்கான வேலையை ஆரம்பித்தார் ரஜினி!
நேற்று முன் தினம் டிசம்பர் 31-ம் தேதி தான் அரசியலுக்கு வரப்போவதாகவும், வருகிற சட்டமன்றத் தேர்தலில் தமிழகம் முழுவதுமுள்ள 234 தொகுதிகளில் தனித்து போட்டியிடப்போவதாகவும் அறிவித்தார்.
அவர் அரசியலுக்கு வருவது ஒருபுறமிருக்க, தான் ஆன்மீக அரசியலை முன்னெடுக்கப் போகிறேன் என்று சொன்னது தான் பல தளங்களில் விவாதத்தை கிளப்பி விட்டிருக்கிறது.
அதென்ன ரஜினியின் புதுவித ஆன்மீக அரசியல் என்று எல்லோரும் குழப்பத்தில் இருக்க, அதற்கும் ரசிகர் சந்திப்பு முடிந்த கையோடு போயஸ்கார்டனில் உள்ள தனது வீட்டுக்கு வந்தவரிடம் நிருபர்கள் சூழ்ந்து கொண்டு கேட்டபோது நியாமும், தர்மமும் கலந்தது தான் ஆன்மீக அரசியல் என்று விளக்கம் கொடுத்தார்.
அதோடு அதற்கான தொடக்கமாக இன்று காலை திடீரென்று சென்னை மைலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ண மடத்துக்கு சென்ற ரஜினி, அங்குள்ள ஆன்மீக தலைவரான கவுதமானந்தாஜி மகராஜை சந்தித்து பேசினார்.
தான் தொடங்க இருக்கும் ஆன்மீக அரசியலுக்கு ஆசீர்வாதம் வாங்குவதற்காக ரஜினி ராமகிருஷ்ண மடம் சென்றிருக்கலாம் என்கிறார்கள் அரசியல் ஆர்வலர்கள்.
இருந்தாலும் 50 ஆண்டுகளுக்கும் மேலாக திராவிடக் கட்சிகளின் கொள்கைகளில் ஊறித்திளைத்த தமிழக மக்களிடம் ரஜினி முன் வைக்கப் போகும் இந்த ஆன்மீக அரசியல் எடுபடுமா? இல்லையா? என்பதை சட்டமன்றத் தேர்தல் வரை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.