மீண்டும் சிபிராஜூடன் ஜோடி சேர்ந்த ரம்யா நம்பீசன்!
2018-ம் ஆம் ஆண்டு ‘ஆவ்னி’ என்ற புலி பல மனிதர்களை உயிருடன் அடித்து சாப்பிட்ட சம்பவம் நாடு முழுதும் சர்ச்சையை கிளப்பியது. மகாராஷ்டிரா மாநிலம் யாவாத்மல் மாவட்டதில் நடைபெற்ற இந்த உண்மைச் சம்பவத்தினை அடிப்படையாக கொண்டு தயாராகி வரும் படம் தான் ”ரேஞ்சர்”.
‘பர்மா’, ‘ராஜா ரங்குஷ்கி’, ‘ஜாக்சன் துரை’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் தரணிதரன் இப்படத்தின் கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார்.
சிபிராஜ் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் சத்யா படத்தைத் தொடர்ந்து மீண்டும் அவருக்கு ஜோடியாக இணைந்திருக்கிறார் ரம்யா நம்பீசன். இன்னொரு நாயகியாக மது ஷாலினி நடிக்கிறார்.
இதுவரை நாம் மனிதர்களை தாக்கும் விலங்குகளை மையமாக கொண்ட படங்கள் நிறைய பார்த்திருப்போம். அவை எல்லாமே கற்பனையை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும். ஆனால் ரேஞ்சர் படம் அப்படியல்ல. நம் நாட்டில் நடைபெற்ற நம்ப முடியாத உண்மை சம்பவத்தை, நம்மை பீதியில் ஆழ்த்தும் வகையிலான சம்பவத்தை அடிப்படையாக கொண்டது.
ரசிகர்களுக்கு நேரடி பிரமிப்பு அனுபவம் தரும் வகையில் இந்தப்படம் மிகப்பிரம்மாண்டமாக தயாராகவுள்ளது. படப்பிடிப்பு தமிழகம், கேரளா, ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அடர்ந்த காட்டுப்பகுதிகளில் நடைபெறவுள்ளது. நிறைய சிஜி, வி.எப்.எக்ஸ் காட்சிகள் படத்தில் இடம்பெறுவதால் அதை தத்ரூபமாக தர ஹாலிவுட் கலைஞர்கள் இப்படத்தில் பணிபுரிய உள்ளார்கள்.
தற்போது படத்தின் முன் தயாரிப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. மிக விரைவில் படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளது.