”என் பையனுக்கு பீஸ் கட்டுவீங்களா?” – ஆர்.ஜே.பாலாஜியை கலங்க வைத்த நாஞ்சில் சம்பத்
அரசியல்வாதிகள் என்றாலே மக்கள் பணத்தை கொள்ளையடித்து சொகுசு வாழ்க்கை வாழ்பவர்கள் என்பது தான் பொதுவாக இருக்கும் கருத்து. ஆனால் இந்தக் கருத்தை தவிடுபொடியாக்கியிருக்கிறார் அரசியல் பிரமுகர் நாஞ்சில் சம்பத்.
பிரபல ரேடியோ ஜாக்கியான ஆர்.ஜே.பாலாஜி ஹீரோவாக நடிக்க, அறிமுக இயக்குனர் பிரபு இயக்கியிருக்கும் அரசியல் நையாண்டி படம் ”எல்.கே.ஜி”.
ப்ரியா ஆனந்த், நாஞ்சில் சம்பத், மயில்சாமி, ராம்குமார் மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படத்தைப் பற்றி ஆர்.ஜே.பாலாஜி பேசியதாவது ”இரண்டு பேருக்கு நான் ரொம்பவே நன்றி சொல்லணும். ஒருத்தர் வந்து நடிகர் பிரபுவோட அண்ணன் ராம்குமார். எனக்குத் தெரிந்து ‘அறுவடை நாள்’, ஷங்கரின் ‘ஐ’ படங்களில் தான் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் நடிக்கும்படி அவரிடம் கேட்டேன். உடனே அவர், ‘உனக்காக நடிக்கிறேன்’னு சொல்லி ஒத்துக்கிட்டார். பிரமாதமாவும் நடிச்சுக் கொடுத்தார். தவிர, ராம்குமார் சார், நல்லா இங்கிலீஷ் பேசுவார். இதுலயும் நிறைய இங்கிலீஷ் டயலாக்கெல்லாம் பேசியிருக்கார்.
அடுத்து நன்றிக்குரிய மனிதர், நாஞ்சில் சம்பத் சார். இந்தப் படத்துல அவர் நடிச்சா நல்லாருக்கும்னு அவருக்கு போன் பண்ணிட்டு அவர் வீட்டுக்குப் போனேன். சென்னை பட்டினப்பாக்கத்துல, ஹவுஸிங்போர்டுல வீடு. 600 சதுர அடி வீடு அது.
அந்த வீட்டைப் பாக்கும்போதே ஒருமாதிரியா இருந்துச்சு. அவர்கிட்ட கதையெல்லாம் சொல்லிட்டு, ‘படத்துல எனக்கு அப்பாவா நடிக்கணும் சார்’னு சொன்னேன்.
ஒருநிமிஷம் யோசிச்சார். என்னைப் பாத்தார். ‘சரி, நடிக்கிறேன். ‘என் பையனுக்கு காலேஜ் ஃபீஸ் கட்டுறியா?’ன்னு கேட்டாரு. 40 வருஷமா அரசியல்ல இருக்கார். பல அரசியல்வாதிகள், ரெண்டு மூணு காலேஜ் கட்டியிருக்காங்க. ஆனா நாஞ்சில் சம்பத் சார், பையனுக்கு காலேஜ் ஃபீஸ் கட்ட முடியலேன்னு சொன்னப்ப ரொம்பவே வேதனையா இருந்துச்சு.
படத்துல அவருக்கு நெகட்டீவ் அரசியல்வாதி ரோல்தான். ஆனா இவரோட குணம் தெரிய ஆரம்பிச்சப்போ, இவரோட நல்ல மனசு புரிஞ்சப்ப, அவரோட கேரக்டரை ரீ ஒர்க் பண்ணினோம். அவரோட குணத்தை வைச்சே கேரக்டர் பண்ணினோம்” என்றார் உருக்கமாக.