ருத்ர தாண்டவம்- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

நேர்மையான போலீஸ் அதிகாரிக்கு சாதியை வைத்து ஒரு பிரச்சனையை உண்டு பண்ணுகிறார்கள் அண்டர் கிரவுண்ட் அரசியல் வாதிகள். கஞ்சா, கூலிப், ட்ரக் போன்ற போதை வஸ்துக்களுக்கு எதிராக நிற்பதால் இந்தப் போலீஸுக்கு எதிராக நிற்கிறது வில்லன் டீம். மெயின் வில்லன் கெளதம் வாசுதேவ் மேனன்…போலீஸாக வரும் நாயகன் ரிச்சர்டு எப்படி வில்லன்களை வதம் செய்து தாண்டவமாடினார் என்பதே ருத்ர தாண்டவம்.

எதாவது ஒரு கதையை நல்லபடமாக எடுத்து ஜெயிக்கணும் என்ற நினைப்பு வேறு. ஒரு கதையில் எதாவது சில்மிசம் பண்ணி ஜெயித்திடணும் என்ற நினைப்பு வேறு. இரண்டாவது சொன்ன சிந்தனை தான் அறத்திற்கு எதிரானது. அதை திரெளபதி படத்திலும் செய்திருந்தார் இயக்குநர் மோகன் ஜி. இந்தப்படத்திலும் செய்திருக்கிறார். ஓரளவு ஆவரேஜான இந்தக் கதைக்குள் வலிந்து திணிக்கப்பட்ட அரசியல் சமாச்சாரங்கள் அவ்வளவு இருக்கின்றன. குறிப்பாக கிறிஸ்துவ மதப்பிரிவுகளை வன்மத்தோடு அணுகி இருப்பது கண்டனத்திற்குரியது. மேலும் PCR act-ஐ சிலர் தவறாகப் பயன்படுத்துகிறார்கள் என்பதைச் சொல்வதற்கு நிறைய சாக்குபோக்குகளை திரைக்கதையில் தேடுகிகிறார் இயக்குநர்.

ஒரு நல்ல படைப்பாளிக்கு இருக்க வேண்டிய அக்கறையை போதைப்பொருளுக்கு அடிமையானால் என்னென்ன நோய்கள் எல்லாம் வரும் என்று சொல்லிருக்கும் காட்சிகளில் பார்க்க முடிகிறது. அந்த ஒன்றுக்காக மட்டும் இயக்குநருக்குப் பாராட்டுக்கள். மத்தபடி எப்படியாவது படத்தைத் தேத்த வேண்டும் என்பதற்காக எதையாவது படத்தில் சேர்க்க வேண்டும் என்ற முடிவு தவறானது.

படத்தின் தரத்திலும் பெரிய அக்கறை எடுத்துக் கொண்டதாக தெரியவில்லை. வசனங்கள் மட்டும் சில இடங்களில் ஈர்க்கிறது..பின்னணி இசை ஓரளவு ஒப்பேத்தி இருக்கிறது. ஒருபாடல் மட்டும் கேட்கும் ரகம்.

பட்டியல் இனத்தின் பிரச்சனைகளை பட்டியல் போட்டுச் சொல்ல வேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கிறோம் என்பதை இயக்குநர் மறந்திருக்கிறார்… அவர்களுக்கு எதிராக நித்தமும் நாட்டில் சாதிய வன்மச்சூறையாடல் நடப்பதை இயக்குநர் கண்டுகொள்வதே இல்லையா? தாண்டவத்தில் ஓரவஞ்சம் நிறைய இருப்பதால் ஜீரணிக்க முடியவில்லை.

2/5