மீண்டும் இளையராஜா இசையில் பாடிய எஸ்.பி.பி!
பாடல்கள் காப்புரிமை தொடர்பான பிரச்சனையில் இனி எந்த இசைக்கச்சேரியிலும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் என்னுடைய பாடல்களை பாடக்கூடாது என்று தடை விதித்தார் இசைஞானி இளையராஜா.
இதனால் இருவருக்கும் கருத்து மோதம் ஏற்பட்டது. எஸ்.பி.பியும் இளையராஜா பாடல்களை மேடைகளில் பாடுவதை தவிர்த்து வந்தார். அதேபோல தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற பாராட்டு விழாவிலும் எஸ்.பி.பி கலந்து கொள்ளவில்லை.
இதனால் இசை ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றம் மிஞ்சிய நிலையில் சில தினங்களுக்கு முன்பு இளையராஜா நடத்திய பிரம்மாண்டமான இசைக்கச்சேரியில் பிரிந்த அந்த இருதுருவங்களும் கருத்து வேறுபாடுகளை மறந்து மீண்டும் இணைந்தனர்.
தற்போது அதன் அடுத்த கட்டமாக இளையராஜா இசையமைக்கும் தமிழரசன் படத்திலும் மெலோடிப் பாடல் ஒன்றை பாடியிருக்கிறார் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.
விஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன் மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படத்தை பாபு யோகேஸ்வரன் இயக்கி வருகிறார்.
இந்தப் பாடல் பதிவின் போது இசைஞானியும், எஸ்.பி.பி அவர்களும் பழைய நிகழ்வுகளை நட்போடு பகிர்ந்து கொண்டார்கள். மேலும் இசை தேவன் இசையில் எஸ்.பி.பி பாடிய மெல்டிகள் எல்லாம் ஆல்டைம் ஹிட். அதே வரிசையில் பழனிபாரதி எழுதியிருக்கும் ”வா வா என் மகனே” என்னும் இந்த தாலாட்டு பாடலும் மிகப்பெரிய ஹிட்டாகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்கிறார்கள் படக்குழுவினர்.
படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவுபெற்று இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விரைவில் இசை வெளியீட்டு விழா மிக பிரமாண்டமாக நடைபெற உள்ளது.