வருங்கால முதல்வருடன் பேசிக்கொண்டிருக்கிறேன்! : உதயநிதியை மனசுக்குள் நினைத்த டைரக்டர்!
‘மனிதன்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு உதயநிதியும், ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் எஸ்.எழிலும் ‘சரவணன் இருக்க பயமேன்’ படத்தில் இணைந்திருக்கிறார்கள்.
வழக்கம் போல தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பில் தயாரிப்பு வேலையை உதயநிதியே கவனித்துக் கொள்ள, தனது ரெகுலர் ஆர்ட்டிஸ்ட்டுகளான சூரி, ரவி மரியா, மனோபாலா, ரோபோ ஷங்கர் என அத்தனை பேரையும் இதிலும் களமிறக்கியிருக்கிறார் எழில்.
படத்தில் உதயநிதிக்கு ரெஜினா, சிருஷ்டி டாங்கே என இரண்டு நாயகிகள். எழில் படங்கள் என்றாலே கமர்ஷியலோடு, காமெடியும் தூக்கலாக இருக்கும். அப்படித்தான் இந்தப்படமும் இருக்கும் என்று தெரிந்தது பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அத்தனை பேரின் பேச்சிலும்!
சந்திப்பில் பேசிய நடிகரும், இயக்குநருமான ரவி மரியா ”வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” படத்தில் கிடைத்த அளவுக்கு இந்த படத்தில் எனக்கு தீனி இல்லை. ஒரிரண்டு சீன்கள் தான் என்றாலும் எழில் படம் என்பதால் மட்டுமே நடித்தேன். வசந்தபாலன் எனக்கு கடவுள், இயக்குனராக இருந்த என்னை நடிகராக்கியவர். எனக்கு காமெடியும் வரும் என்பதை எனக்கு உணர்த்தியவர் என் அண்ணன் இயக்குனர் எழில். அதனால் தான் ஒரு சீன் என்றாலும் நான் நடிக்கிறேன். உதயநிதி ஸ்டாலின் பெரிய குடும்பத்தின் வாரிசு என்றாலும் எல்லோரிடமும் சகஜமாக பழகக் கூடியவர். நல்ல மனிதர் என்றார் நடிகர் ரவி மரியா.
அடுத்து வந்த நடிகர் ஜி.எம்.குமார் படப்பிடிப்பில் பார்த்த உதயநிதியை தான் வருங்கால முதல்வர் ரேஞ்சுக்கு கற்பனை பண்ணியதை நினைவு கூர்ந்தார்… ”பல முக்கியமான நடிகர்கள் நடித்துக் கொண்டிருக்கும் போது மானிட்டரில் மிகவும் அமைதியாக அமர்ந்திப்பார் இயக்குனர் எழில். அவர் பொறுமைசாலி மட்டும் இல்லை, புத்திசாலி. எடிட்டிங் தெரிந்த ஒரு இயக்குனர். அதுதான் இயக்குனர் எழிலின் வெற்றிக்கான முக்கிய காரணம். நல்ல இயக்குனர்கள் இங்கு அதிகமாக இல்லை. எழில் மாதிரி குறைந்தபட்சம் 10 இயக்குனர்கள் தற்போதைய தமிழ்சினிமாவுக்கு தேவை. படப்பிடிப்பில் நான் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்த போது அவரை கவனிக்கவில்லை. என்றாலும் அவரே என்னைத் தேடி வந்து வணக்கம் வைத்து விட்டுச் சென்றார். அதேபோல படப்பிடிப்பில் அவரை இரண்டு முறை பார்த்து பேசியிருக்கிறேன். அப்போது எனக்குள் நாம் தமிழ்நாட்டின் வருங்கால முதலமைச்சருடன் பேசிக்கொண்டிருக்கிறோமோ? என்று நினைத்துக் கொண்டேன். ஏன் அவர் முதல்வராக ஆகலாம். இன்னும் இருபது வருஷம் கழிச்சு நான் உயிரோட இருந்தா அந்த சம்பவத்தை எல்லாம் நெனைச்சுப் பார்ப்பேன் என்றார்.
பின்னர் பேசிய உதயநிதி ”சிருஷ்டி என்ன சொன்னாலும் நம்புவார், கொச்சினை தாண்டி ஒரு கடற்கரையில் ஷூட்டிங் நடந்தபோது சிருஷ்டிக்கு கேரவன் கூட இல்லை. ஆனாலும் ஒத்துழைப்பு கொடுத்து நடித்தார். எம்புட்டு இருக்குது ஆசை பாட்டை பத்தி எல்லோரும் பேசுனாங்க. அந்த பாட்டு அவ்ளோ பெரிய அளவு பேசப்படறதுக்கு முக்கிய காரணம் ரெஜினா தான். நான் மூணாவதா ஒப்பந்தமான படம் தான் சரவணன் இருக்க பயமேன். ஆனா முதல்ல ரிலீஸ் ஆகுது, அது தான் எழில் சாரின் வேகம். படம் பார்த்துட்டு நல்லா இருந்தா உடனே விமர்சனம் எழுதுங்க, இல்லைனா மூணு நாள் கழிச்சு எழுதுங்க” என்றார்.