‘சர்கார்’ கொண்டாட்டம் ஆரம்பம்! – செப். 24ல் சிங்கிள் டிராக் ரிலீஸ்
‘கத்தி’ படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் தயாராகி வரும் படம் சர்கார்.
சன் பிக்சர்ஸ் அதிக பொருட்செலவில் தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.
விஜய் புகைப்பிடிப்பது போன்று இருந்த இப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஜூன் மாதம் 21-ம் தேதி வெளியாகி பெரும் சர்ச்சைக்குள்ளானது. அரசியல் படமாக உருவாகி வரும் இந்த படத்தில், ராதாரவி மற்றும் பழ.கருப்பையா இருவரும் எதிர் எதிர் அரசியல்வாதிகளாக நடிக்கின்றனர். மேலும், வரலட்சுமி சரத்குமார், யோகிபாபு, பிரேம் குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
தீபாவளி ரிலீசாக வர இருக்கும் இப்படத்தின் கொண்டாட்டம் செப் 19-ம் தேதி ( இன்று முதல் ) முதல் ஆரம்பம் என்று கடந்த சில தினங்களாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்து வந்தது. டீஸரா? ட்ரெய்லரா? அல்லது அது எந்த மாதிரியான கொண்டாட்டமாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.
படத்தின் பாடல்கள் அக்டோபர் 2-ம் தேதி வெளியாக உள்ள நிலையில் அதன் கொண்டாட்டமாக படத்தின் முதல் பாடலை வரும் செப்டம்பர் 24-ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிட இருப்பதாக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
‘மெர்சல்’ படத்தில் இடம்பெற்ற ‘ஆளப்போறான் தமிழன்’ பாடல் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. அதே பாணியில் சர்கார் படத்தில் விஜய்யின் எண்ட்ரி பாடலை முதல் பாடலாக வெளியிட உள்ளனர்.