சவரக்கத்தி – விமர்சனம்
RATING – 4/5
நடித்தவர்கள் – ராம், மிஸ்கின், பூர்ணா மற்றும் பலர்
இசை – அரோல் கரோலி
ஒளிப்பதிவு – கார்த்திக் வெங்கட்ராமன்
இயக்கம் – ஜி.ஆர். ஆதித்யா
வகை – க்ரைம், நாடகம், காமெடி
சென்சார் பரிந்துரை – ‘U’ சர்ட்டிபிகேட்
கால அளவு – 1 மணி நேரம் 54 நிமிடங்கள்
வெவ்வேறு தளங்களில் பயணிக்கும் இயக்குநர்கள் மிஸ்கினும், ராமும் ஒரே படத்தில் நடிகர்களாக இணைகிறார்கள் என்கிற செய்தி வந்ததுமே ‘சவரக்கத்தி’ படம் ரசிகர்கள் மத்தியில் தனிக்கவனம் பெற்றது.
வழக்கம் போல எளிமையாக கதையை எழுதி, அதற்கு தனக்கே உரிய பாணியில் மிஸ்கின் திரைக்கதை அமைத்துக் கொடுக்க, அவரது தம்பி ஜி.ஆர்.ஆதித்யா இயக்குநராக அறிமுகமாகியிருக்கிறார்.
ஆளை வெட்டிச் சாய்க்கும் கத்தியின் கூர்மையை விட, முகச்சவரம் செய்யும் சிறிய சவரக்கத்திக்கு கூர்மையும், வலிமையும் ஜாஸ்தி என்பதை எளிய மனிதர்களின் வாழ்வியலோடு நமக்கு அதி அற்புதமான ரசிப்பனுபவத்தை தரும் படம் தான் இந்த ‘சவரக்கத்தி.’
சவரத் தொழிலாளியாக வரும் இயக்குநர் ராம், வெள்ளந்தியாகப் பேசும், அதே சமயம் காது கேட்காதவராகவும், விளிம்பு நிலைப் பெண்ணாக வரும் பூர்ணா, முட்டைக்கண் சைஸ் விழிகளாலேயே மிரட்டும் ரெளடியாக வரும் இயக்குநர் மிஸ்கின் மூவரும் தான் படத்தில் பிரதான கதாபாத்திரங்கள்.
மூவரைச் சுற்றி நகர்கிற கதையில் படம் முழுக்க மெல்லிய சோகமும் வழிந்தோடுகிறது. தனது துணிச்சலை சீண்டி விட்ட ராமை கொலை செய்தே தீர வேண்டும் என்கிற ஆத்திரத்தோடு மிஸ்கின் தனது காரில் துரத்திக் கொண்டிருக்க, அந்தக் கொலைகாரப் பாவியின் கைகளில் ராம் சிக்கி விடக்கூடாதே என்று படம் பார்க்கும் நம் மனசு பதைபதைக்கிறது.
அதைவிட நிறைமாத கர்ப்பிணியான பூர்ணா மிஸ்கின் கைகளில் சிக்குகிற போது எங்கே இதுவும் ஒரு இரக்கமில்லாத பாலாவின் படம் போல ஈரக்குலையை நடுங்க வைத்து விடுமோ என்று எக்ஸ்ட்ராவாக பதைபதைக்கிறது மனசு. நல்ல வேளையாக அப்படி ஒரு கொடூர முடிவுக்குச் செல்லாதது நிம்மதியைத் தருகிறது.
படம் முழுக்க இழையோடும் நகைச்சுவையும், ராம், மிஸ்கின், பூர்ணா மூவருடன் பயணிக்கிற மற்ற கதாபாத்திரங்களும் சோகத்தை மறந்து அட்டகாசமாக நடிப்பால் நம்மை சிரிக்க வைக்கிறார்கள்.
சைக்கிள் கடை தொழிலாளி, கரும்பு ஜூஸ் விற்பனை செய்கிற பெண்மணி, கடைகடையாக ஏறி இறங்கி சாம்பிராணி புகை போடுகிற இஸ்லாமியர், குப்பை பொறுக்குகிறவர், இளநீர் விற்பனை செய்பவர், மீன் விற்பவர் என படத்தில் ஆங்காங்கே விளிம்பு நிலை மனிதர்களின் மனிதாபமானத்தை காட்சிப்படுத்தியதற்கு ஸ்பெஷல் லைக்ஸ்!
மிஸ்கினிடம் வேலை செய்தவர் என்பதற்கான அடையாளங்கள் படத்தில் ஆங்காங்கே தெரிந்தாலும், இது மிஸ்கின் படம் தான் என்பதற்கான சில தனித்த அடையாளங்களை தவிர்த்திருக்கிறார் இயக்குநர் ஜி.ஆர்.ஆதித்யா.
”என்னதான் வானத்துல ராக்கெட் விட்டாலும் கையால தான் கழுவியாகணும்.”, ”ஆபீஸுக்கு வெளியில போங்க. ஒருத்தர் பிச்சை எடுத்துக்கிட்டு இருப்பார். அவரு ஒரு சுதந்திர போராட்ட தியாகி. அவர்கிட்ட கையெழுத்து வாங்கிட்டு வாங்க, இது சீர்திருத்தக் கல்யாணம்”னு நான் எழுதிடுறேன்” என்று படத்தில் வருகிற வசனங்களும் செம ஷார்ப்!
இப்படி படம் முழுக்க சிலாகிக்க, ஆராதிக்க, மனம் விட்டுச் சிரிக்க, நெகிழ்ந்து அழ, தன்னிலை மறக்க என சீட்டோடு கட்டிப்போடும் காட்சிகள் ஏராளம் உண்டு.
அரோல் கரோலியின் பின்னணி இசை மிஸ்கின் படங்களுக்கே உரிய அக்மார்க் இசையாக மெய் மறக்கச் செய்கிறது. ”தங்கக் கத்தி” ”அண்ணாந்து பார்” என இரண்டு பாடல்கள் தான். இரண்டுமே தேனமுது. கார்த்திக் வெங்கட்ராமனின் ஒளிப்பதிவு கூடுதல் பலம்.
முன்பே எளிதாக யூகித்து விட முடிகிற காட்சிகளையும், சில கேரக்டர்களில் தெரியும் நாடக்கத்தனமான நடிப்பு ஆகிய குறைகளை தவிர்த்திருக்கலாம்.
கத்தி, ரத்தம், கொலை என ஒரு க்ரைம் பின்னணியில் எழுதப்பட்ட கதை, அதை அதன் போக்கில் கொண்டு செல்லாமல் கிளைமாக்ஸ் வரை காமெடியாக நகர்வது தான் இந்தப்படம் நம் மனசுக்கு நெருக்கமான படங்களில் ஒன்றாகி விடுகிறது.
சவரக்கத்தி – நம்ம மொழியில் ஒரு நல்ல சினிமா!