செய் – விமர்சனம்
RATING – 2.5/5
நடித்தவர்கள் – நகுல், அஞ்சால் முஞ்சல், பிரகாஷ் ராஜ், நாசர் மற்றும் பலர்
ஒளிப்பதிவு – விஜய் உலகநாத்
இசை – நிக்ஸ் லோபஸ்
இயக்கம் – ராஜ்பாபு
வகை – நாடகம், த்ரில்லர்
சென்சார் பரிந்துரை – ‘U/A’
கால அளவு – 2 மணி நேரம் 8 நிமிடங்கள்
நகுல் நடிப்பில் பல தடைகளைத் தாண்டி ரிலீசாகியிருக்கும் படம் தான் இந்த ‘செய்’.
ஹீரோவாகும் ஆசையில் வெட்டியாக ஊரையே சுற்றி வந்து சின்னச் சின்னதாய் ஏமாற்றி தெருவைச் சுற்றியிருப்பவர்களிடம் காசு பார்க்கிறார் நகுல்.
ஒருநாள் ஆம்புலன்ஸ் டிரைவரான அப்பாவுக்கு உடம்பு சரியில்லாமல் போக, அந்த வண்டியை ஓட்டிச் செல்லும் பொறுப்பு அவருக்கு வருகிறது. அதனால் ஒரு கடத்தல் கும்பலிடம் சிக்கிக் கொள்ள அந்த கும்பலிடமிருந்து எப்படி தப்பிக்கிறார்? கடத்தல் கும்பலை சட்டத்தின் முன் அவர்களை நிறுத்தினாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.
தனக்கே உரிய சுறுசுறுப்பு, கலகலப்பு, நையாண்டி, நக்கலுடன் நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார் நகுல். ஆம்புலன்ஸ் வண்டியை ஓட்டுவதைக் கூட விளையாட்டாகவே எடுத்துக் கொள்பவர் ஒரு கட்டத்தில் சீரியஸாக மாறும் போது ஆக்ஷன் காட்சிகளில் கலக்கியிருக்கிறார்.
நகுலை பின் தொடரும் பெண்ணாக வருகிறார் புதுமுக நாயகி அஞ்சால் முஞ்சல். குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய கேரக்டர் இல்லை என்றாலும் அழகும், துறுதுறுப்பென்ற நடிப்பும் கவர்கிறது.
வயது முதிர்ந்த பெரியவராக எண்ட்ரி கொடுக்கும் நாசர், கிளைமாக்ஸுக்கு முன்பாக போலீஸ் அதிகாரியாக எண்ட்ரி கொடுக்கும் பிரகாஷ்ராஜ் இருவருமே தனது அனுபவ நடிப்பால் பலம் சேர்த்திருக்கிறார்கள்.
நீ செய்யும் செயல் நல்லது என்றால் அதை துணிந்து செய் என்பது தான் இப்படத்தின் டைட்டில் சொல்லும் செய்தி.
மனித உறுப்புகளை திருடும் கும்பலைப் பற்றி மக்களுக்கு எச்சரிக்கும் அதே நேரத்தில், உடல் உறுப்பு தானமும் முக்கியம் என்கிற சமூக விழிப்புணர்வையும் ரசிகர்களுக்கு சொன்ன விதத்தில் அறிமுக இயக்குனர் ராஜ்பாபுவை பாராட்டலாம்.