5 நாட்களில் 30 கோடியை குவித்த வி.ஐ.பி 2! : டாப் 10 ஹீரோக்கள் பட்டியலில் இடம் பிடித்தார் தனுஷ்

”வேலையில்லா பட்டதாரி” படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமாக தனுஷ், கஜோல், அமலாபால், சமுத்திரக்கனி மற்றும் விவேக் நடித்த ”வி.ஐ.பி 2 ” உலகம் முழுவதும் கடந்த 11 ஆம் தேதி வெளியானது.
படத்துக்கு கலவையான விமர்சனங்கள் வந்த போதும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று ரிலீசான 5 நாட்களில் 30 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபீஸில் சாதனை படைத்திருக்கிறது. இந்த சந்தோஷ தகவலை இன்று நடைபெற்ற படத்தின் வெற்றி விழாவில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு அறிவித்தார்.
சந்திப்பில் பேசிய நாயகன் தனுஷ், ” படத்தின் கதையை இயக்குனரிடம் கொடுக்கும் பொழுதே வி.ஐ.பி-யின் முதல் பாகம் அளவிற்கு இருக்காது என்பதை சொல்லியே தான் கொடுத்தேன். இருப்பினும் படத்தின் இந்த மிகப்பெரிய வெற்றி மிகுந்த சந்தோஷத்தை தருகிறது. படத்திலிருக்கும் ஸ்ட்ராங்க் ஆன கதையே படம் வெற்றி பெற காரணம். பாஸிட்டிவிட்டிக்கு என்றைக்குமே ஒரு எனர்ஜி இருக்கும், அதுதான் இந்தப் படத்தில் ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது.
ஒரு தாய் இல்லாத வீட்டில் ஒரு தந்தை தாயகவும் மகனுக்கு நல்ல தோழனாகவும் இருக்க வேண்டும், அதே போல படத்தின் இறுதியில் வில்லியாக வரும் பெண் தோற்பது தான் வழக்கமான கிளைமாக்ஸ், ஆனால் அப்படி இருக்கக் கூடாது ஆண், பெண் இருவருமே சமம் என்று கருத்தினை வலியுறுத்திதான் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. வி.ஐ.பி-2 படத்திற்கு வட இந்தியாவில் 1600 தியேட்டர்கள் புக் ஆகியுள்ளது. கண்டிப்பாக ஹிந்தியிலும் நல்ல வெற்றி பெறும் என்று நம்புகிறேன். வி.ஐ.பி-3 ஆம் பாகமும் கண்டிப்பாக உருவாகும், கண்டிப்பாக அந்தப் படம் இதை விட நல்ல வரவேற்பை பெறும்,”என்று கூறினார்.
இயக்குனர் சௌந்தர்யா ரஜினிகாந்த் பேசுகையில் “எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது, படம் வெற்றியடைந்துள்ளது. தானு சாருக்கு நன்றி, படப்பிடிப்பில் என்னை அவர் மகள் போல் பார்த்துக் கொண்டார். பொதுவாகவே சீக்வல் படங்கள் எடுப்பதில் பெரிய சவால் இருக்கும். அதைத் தாண்டி நான் இயக்கிய படம் வெற்றி அடைந்திருப்பது பெரிய மகிழ்ச்சி. தாணு சார் பாக்ஸ் ஆபிஸ் விவரம் பற்றி சொன்னது எனக்கு நான் இயக்கிய படமா? என்று ஆச்சரியமாக இருந்தது. வாய்ப்பு கிடைத்தால் வி.ஜ.பி-3 ஆம் பாகத்தையும் இயக்குவேன். ” என்றார்.
பின்னர் பேசிய தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு “வி.ஐ.பி படம் திரையிடப்பட்டு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் இருந்து நேற்று என்னை போனில் அழைத்த நண்பர் ஒருவர் வி.ஐ.பி-2 படத்தின் வெற்றியின் மூலமாக தனுஷூம் டாப் 10 ஹீரோக்கள் லிஸ்ட்டில் இடம் பிடித்துள்ளார் என்று கூறினார். வி.ஐ.பி-2 தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் வெளிநாட்டிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.” என்றார்.
பின் கையோடு கொண்டு வந்திருந்த வசூல் பட்டியலையும் வாசித்தார்.
அந்த வகையில் மலேசியா – 5 கோடி 30 லட்சம், அமெரிக்கா – 1 கோடி 48 லட்சம், சிங்கப்பூர் 1 கோடி 38 லட்சம், சென்னை, செங்கல்பட்டு – 6 கோடி 70 லட்சம், கோவை – 3 கோடி 72 லட்சம், மதுரை – 2 கோடி 40 லட்சம், திருச்சி – 2 கோடி 10 லட்சம், சேலம் – 1 கோடி 95 லட்சம், வட ஆற்காடு – 1 கோடி 48 லட்சம், தென் ஆற்காடு – 1 கோடி 65 லட்சம், கேரளா 2 கோடி 75 லட்சம் என 30 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்திருக்கிறதாம் வி.ஐ.பி 2.
மேலும் இன்னும் சில ஏரியாக்களின் வசூல் விவரங்கள் குறித்து இங்கு வெளிப்படையாக சொல்ல முடியாத காரணத்தால் அந்த வசூலையும் சேர்த்தால் ‘விஐபி-2’வின் வசூல் மேலும் பல கோடிகள் இருக்கும் என்ற தாணு, இந்த படம் தெலுங்கில் வருகிற 25-ஆம் தேதியும், ஹிந்தியில் வருகிற 18-ஆம் தேதியும் வெளியாகவிருக்கிறது. படத்துக்கு தமிழில் கிடைத்த வரவேற்பைப் பார்த்து ‘விஐபி-2’வின் ஹிந்தி பதிப்பை 1200-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் அதை வாங்கிய பி.வி.ஆர் நிறுவனம் வெளியிட திட்டமிட்டிருப்பதாக தெரிவித்தார் தயாரிப்பாளர் எஸ். தாணு.