திட்டி வாசல் – விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

thitti-vasal

RATING : 2/5

நட்சத்திரங்கள் – மாஸ்டர் மகேந்திரன், தனு ஷெட்டி, ஐஸ்வர்யா, நாசர், வினோத், அஜய் ரத்னம், தீரஜ், ஸ்ரீதர் மற்றும் பலர்

இயக்கம் – பிரதாப் முரளி

சென்சார் சர்ட்டிபிகேட் – ‘U/A’

வகை : ஆக்‌ஷன் – நாடகம்

கால அளவு : 1 மணி நேரம் 53 நிமிடங்கள்

காடுகளில் வாழ்கிற மலைவாழ் மக்களின் வாழ்க்கையில் என்றைக்குமே அங்கு வாழும் விலங்குகளால் பிரச்சனைகள் வந்ததில்லை. மாறாக எந்த அரசு நம்மை வாழ விடும் என்று நம்புகிறார்களோ? அதே அரசாங்கத்தை நிர்வகிக்கிற அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் தான் அவர்களின் வாழ்க்கையில் பெரும் பிரச்சனையாக வந்து நிற்பார்கள். அப்படி மலைவாழ் மக்களின் பிரச்னைகள், போராட்டங்கள், அவர்களின் வாழ்வியலைப் பற்றிப் பேசுகிற படம் தான் இந்த ‘திட்டி வாசல்.’

தலைமுறை தலைமுறைகளாக ஒரு காட்டுப் பகுதியில் வாழ்ந்து வருகிறார்கள் நாசர் தலைமையிலான மலைவாழ் மக்கள். அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி விட்டு அந்தக் காட்டுப் பகுதியை அபகரிக்க திட்டம் தீட்டுகிறார் வனத்துறை அமைச்சர்.

அதற்காக வனக்காவலர், கலெக்டர், உள்ளூர் போலீஸ், எம்.எல்.ஏ ஆகியோரின் துணையுடன் அந்த மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்த முடிவெடுக்கிறார். இதனால் ஏற்படுகிற கலவரத்தில் மலைவாழ் மக்களின் தலைவனான நாசர் கொல்லப்படுகிறார். மேலும் அந்த கிராமத்தில்ஹீரோ மகேந்திரன் உள்ளிட்டவர்களை நக்சலைட் என்று முத்திரை குத்தி ஜெயிலுக்கு அனுப்புகிறார்கள். அது மட்டுமில்லாமல் நாயகி தனு ஷெட்டி போலீஸ்காரர்களால் கற்பழிக்கப்பட, தான் சார்ந்த மலை வாழ் மக்களையும், காட்டையும் காப்பாற்றக் கோரி கலெக்டரிடம் மனு கொடுக்கிறார்.

அங்கு கலெக்டரையே நெருங்க முடியாத சூழல் ஏற்பட, அடுத்து மீடியாக்களிடம் செல்கிறார். அங்கும் கதைவு அடைக்கப்பட்டு விட வேறு வழியில்லாமல் மீண்டும் கலெக்டர் அலுவலகம் முன்னால் வந்து தீக்குளிக்கிறார். அதன்பிறகு குறைந்த காயங்களோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அவரிடம் கலெக்டர் வாக்குமூலம் வாங்குகிறார்.

அதனடிப்படையில் செயல்படும் கலெக்டர் அந்த மலை வாழ் மக்களுக்கு நீதியைத் தேடித் தந்தாரா? காட்டை அமைச்சர் உள்ளிட்டவர்களிடமிருந்து காப்பாற்றினாரா? இல்லையா? என்பதே கிளைமாக்ஸ்.

காடு என்ற பெயரில் ஆரம்பித்து பல படங்களில் மலை வாழ் மக்களின் வாழ்க்கைச் சூழலையும், காட்டின் முக்கியத்துவத்தையும் பார்த்து விட்டதால் இந்தப்படத்தையும் அந்த லிஸ்ட்டில் பத்தோடு பதினொன்றாகத்தான் நாம் கணக்கில் வைக்க வேண்டியிருக்கிறது.

சாமானியர்களின் குரலை அரசோ, அரசியல் வாதிகளோ, அதிகாரிகளோ ஏன் ஊடகங்களோ கூட கேட்பதில்லை என்கிற உண்மையை துணிச்சலாக திரைக்கதை அமைத்த விதத்தில் இயக்குநர் பிரதாப் முரளியை பாராட்டலாம். குறிப்பாக கலெக்டர் அலுவலகத்தில் நாயகி தீக்குளிக்கும் காட்சி சில வாரங்களுக்கு முன்பு திருநெல்வேலி கலெக்டர் அலுவலகத்தில் ஒரு குடும்பமே கந்து வட்டி கொடுமையால் தீக்குளித்த சம்பவத்தை நினைவூட்டியது.

மலைவாழ் மக்களின் தலைவராக வரும் நாசர் மூப்பன் என்கிற கேரக்டரில் இம்மியளவு குறை வைக்காமல் அப்படியே நம் முன் கொண்டு வந்திருக்கிறார்.

எளியவர்களாக இருந்தாலும் போராட்டம் ஒன்றே நியாயத்துக்கு ஒரே வழி என்று அதன் போக்கில் போகிற துணிச்சலான இளைஞர்களாக மகேந்திரன், வினோத், அவர்களின் காதலிகளாக வரும் நாயகிகள் தனு ஷெட்டி, ஐஸ்வர்யா ஆகியோரும் குறையில்லாத நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள்.

ஜெயிலில் புரட்சிகரமான கருத்துகளைச் சொல்லும் கைதியாக வரும் அஜய் ரத்னம், போலீஸ்காரராக வந்து அடாவடித்தனம் செய்யும் தீரஜ் அஜய் ரத்னம் (அஜய் ரத்னத்தின் மகன்) மற்றும் மந்திரியாக வரும் ஸ்ரீனிவாசப்பா ஆகியோரும் சிறப்பான நடிப்பைத் தந்திருந்தாலும் அதில் வெளிப்படுகிற செயற்கைத் தனத்தை கொஞ்சம் தவிர்த்திருக்கலாம்.

காடு மற்றும் அதைச் சார்ந்து வாழ்கிற மலை வாழ் மக்களின் வாழ்க்கை முறை அங்குள்ள இயற்கைச் சூழல், பரிசுத்தமான காற்று, பச்சைப் பசேல் என்ற காடுகள் என சமூகக் கருத்தை படம் முன் வைத்தாலும் காதல், காமெடி, குத்துப் பாட்டு என கமர்ஷியல் ஐயிட்டங்களையும் சேர்க்கத் தவறவில்லை இயக்குநர் பிரதாப் முரளி.