உலகத்திரைப்பட விழாவில் ‘ஒத்த செருப்பு சைஸ் 7’
P
தமிழ் சினிமா தாண்டி உலகம் முழுவதுமிலிருந்து பாராட்டு குவித்து வரும் “ஒத்த செருப்பு சைஸ் 7” படத்திற்கு மேலும் ஒரு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. திரை வரலாற்றில் முக்கியமானதொரு படைப்பாக, உலக சினிமாவை தமிழ் சினிமா பக்கம் திரும்பி பார்க்க வைத்த படைப்பாக, உருவாகி இருக்கும் “ஒத்த செருப்பு சைஸ் 7” பல்வேறு வகையிலும் சினிமா உலகத்தினருக்கு பாடமாக விளங்கி வருகிறது. மேலும் ஒரு படத்தை ரசிகனிடம் கொண்டு சேர்ப்பது எப்படி என்பதை இப்படம் மூலம் பாடமாக எடுத்திருக்கிறார் பார்த்திபன். திரையரங்கில் ரசிகர்களால் ஆராதிக்கப்பட்டு வரும் “ஒத்த செருப்பு சைஸ் 7” படம் தற்போது IFFI 2019 உலகத் திரைப்பட திருவிழாவிற்கு 26 படங்களில் ஒன்றாக தேர்வாகியுள்ளது.
தயாரிப்பாளர், நடிகர், இயக்குநர் பார்த்திபன் இது குறித்து பகிர்ந்து கொண்டது…
தேர்வாளர்களின் அன்பால் நான் நெகிழ்ந்து போயிருக்கிறேன். அவர்கள் தந்த இந்த அடையாளம் “ஒத்த செருப்பு சைஸ் 7” படத்திற்கு உலகளவிலான கதவை திறந்து வைத்துள்ளது. இந்தப்படம் ஒரு மனிதன் மட்டுமே நடித்து இயக்கி தயாரித்த படம். ஒரு புது முயற்சி ஆனால் ஒரு மனிதனின் சாதனையாக அடையாளப்படுத்தப்படும் இப்படத்திற்கு பின்னால் சில பெரும்மனிதர்களின் உழைப்பும் அன்பும் அடங்கியிருக்கிறது. அளவில்லாத அன்பின் வழி இசையமைத்த சந்தோஷ் நாராயணின் பாடலும், சத்யாவின் பின்னணி இசையும் மனம் கவர்ந்த ராம்ஜியின் ஒளிப்பதிவும், ரசூல் பூக்குட்டியின் அசாத்திய ஒலிப்பதிவும் இப்படத்திற்கு பெரும்பலமாக அமைந்திருந்தது. இந்தப்படத்தை பராட்டி தங்கள் வாழ்த்துக்கள் மூலம் ரசிகர்களிடம் சேர்த்த இந்தியாவின் பெரும் நட்சத்திரங்கள் அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த அங்கீகாரம் எனக்கு மிகப்பெரும் சந்தோஷத்தை அளித்திருக்கிறது இந்திய திரைப்பட திருவிழாவிற்கு 26 படங்களில் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்டது மட்டுமல்லாமல் அது இத்திரைப்பட திருவிழாவின் 50வது தங்க ஆண்டில் நடைபெற்றிருப்பது மேலும் கொண்டாட்டதிற்குரியது. இந்நேரத்தில் தமிழில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மற்றுமொரு படைப்பான லக்ஷ்மி ராம்கிருஷ்ணன் அவர்களின் ஹவுஸ் ஓனர் படத்திற்கும் எனது அன்பு வாழ்த்துக்கள். இந்த அங்கீகாரம் மேலும் பல புது முயற்சிகளுக்கும், சோதனை முயற்சிகளுக்கும் ஊக்கம் தந்திருக்கிறது என்றார்.