உயிர் தமிழுக்கு“மீண்டும் ஒரு அமைதிப்படை’-சிநேகன்!

Get real time updates directly on you device, subscribe now.

ஆன்டி இண்டியன் படத்தை தொடர்ந்து மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்துள்ள படம் ‘உயிர் தமிழுக்கு’. இந்தப்படத்தின் மூலம் இயக்குனராகவும் அடியெடுத்து வைத்துள்ளார் ஆதம்பாவா. அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் அமீர் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக சாந்தினி ஶ்ரீதரன் நடித்துள்ளார். இவர்களுடன் ஆனந்த்தராஜ், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, ராஜ்கபூர், சுப்ரமணியசிவா, மகாநதி சங்கர், ராஜசிம்மன், சரவணசக்தி மற்றும் பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு இப்படம் மூலம் வெற்றிகரமாக ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் இசையமைப்பாளர் வித்யாசாகர்.

Pvr inox பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப்படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது. வரும் மே-10ஆம் தேதி உலகெங்கிலும் இப்படம் வெளியாக இருக்கிறது.. இந்தநிலையில் இப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது.இந்தநிகழ்வில் நாயகன் அமீர், நாயகி சாந்தினி, இயக்குநர் ஆதம்பாவா உள்ளிட்ட படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் பொன்வண்ணன், இயக்குநர்கள் கரு.பழனியப்பன், எஸ்.ஆர் பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் கவிஞர் சினேகன் பேசும்போது,

“இந்த படம் முடிந்த பிறகு தான் இந்த படத்திற்குள்ளே நான் வந்தேன். இந்த படத்திற்கு புரமோஷன் பாடல் ஒன்றை தயார் செய்ய வேண்டும் என ஆதம்பாவா இந்த படத்தின் காட்சிகள் பலவற்றை போட்டுக் காட்டினார். அவற்றைப் பார்த்தபோது மீண்டும் ஒரு அமைதிப்படை படம் மாதிரி இது அமைந்திருக்கிறது என தோன்றியது. அமைதிப்படைக்குப் பிறகு ஒரு அரசியல் நக்கல் கலந்த படம் வரவில்லையே என்கிற குறையை இந்த உயிர் தமிழுக்கு போக்கும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதிகப்படியான படைப்புகளை கொடுக்காவிட்டாலும் ஆளுமையான படைப்புகளை கொடுத்து அசைக்க முடியாத இடத்தில் இருக்கிறார் அமீர். சத்யராஜ் சொன்னது போல சொல்ல வேண்டும் என்றால் ‘பாண்டியர் பரம்பரையில் ஒரு எம்எல்ஏ’ என்பது போல நடித்துள்ளார் அமீர். நிரபராதியாக இருந்து விட்டால் எங்கேயுமே அச்சப்பட தேவையில்லை. ஓடி ஒளிய வேண்டிய தேவை இல்லை. ஒரு மனிதன் அமைதியாக இருப்பதனாலேயே என்ன வேண்டுமானாலும் இந்த உலகம் பேசுமா என்கிற பெரிய வருத்தம் இருக்கிறது. அமீரும் ஆதம்பாவாவும் இந்த படத்தில் துணிந்து இருக்கிறார்கள். நிச்சயம் வெல்வார்கள்” என்று கூறினார்.