விஜய்யின் பல நாள் ஆசையை நிறைவேற்றப் போகும் ‘விஜய் 60’ இயக்குநர்!

ரஜினிகாந்த் டைட்டிலுக்கு ஆசைப்படும் நடிகர்கள் லிஸ்ட்டை எடுத்துப் பார்த்தால் அதில் டஜன் கணக்கில் இளம் ஹீரோக்கள் வரிசை கட்டி நிற்பார்கள்.
அப்படி டைட்டில் வைக்கின்ற படங்களும் அடுத்தடுத்து மண்ணைக் கவ்வி ரஜினிக்கு பெரும் சங்கடத்தை தருகிறதோ? இல்லையோ? அவரது ரசிகர்களுக்கு எரிச்சலை கொடுத்து வருகிறது.
”ஏன்யா எங்க தலைவர் நடிச்ச ஹிட் படத்தோட டைட்டிலை உங்க மொக்கைப் படத்துக்கு வெச்சு வெறுப்பேத்துறீங்க?” என்று சமூகவலைத் தளங்களில் குமுறுகிற அளவுக்கு விஷயம் சீரியஸ் ஆகிக்கொண்டிருக்கிறது.
இளம் ஹீரோக்களுக்குத்தான் இந்த ஆசை என்றால் ”இளைய தளபதி” விஜய்க்கும் அப்படி ஒரு ஆசை பல நாட்களாக இருந்து வருகிறதாம்.
ஆனால் அவர் ரஜினி டைட்டிலுக்கு மட்டும் ஆசைப்படவில்லை. ரஜினி அல்லது எம்.ஜி.ஆர் இரண்டு ஹீரோக்களில் யாராவது ஒருவர் நடித்த படத்தின் டைட்டிலுக்கு ஆசைப்பட்டார். இதுநாள் வரை அதற்கான சரியான கதையும், சந்தர்ப்பமும் அமையாமல் இருந்தது.
இப்போது அந்த ஆசை கைகூடி வந்திருக்கிறது.
ஆமாம், பரதன் இயக்கத்தில் விஜயா புரொடக்ஷன்ஸ் விஜய்யை வைத்துத் தயாரித்து வரும் 60 வது படத்துக்கு ‘எங்கள் வீட்டு பிள்ளை’ டைட்டிலை வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.
டைட்டில் இயக்குநருக்கு ஓ.கே என்றால் எனக்கும் ஓ.கே தான் என்று க்ரீன் சிக்னல் கொடுத்திருக்கிறார் விஜய்.
இனிமே விஜய் ரசிகர்களும் விஜய்யை கொண்டாடுவார்கள்.
‘எங்க வீட்டு பிள்ளை’ விஜய்!