சிவகார்த்திகேயன் பேரை கேட்டதும் உற்சாகமான விஜய் சேதுபதி!
60 வயசானாலும் ஹீயோயிஸத்தை விட்டு வெளியே வர அடம்பிடிக்கும் ஹீரோக்களுக்கு மத்தியில் இதோ ஒரு படம் முழுக்க தாத்தாவாக நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி. படத்தின் பெயர் ‘ஆரஞ்சு மிட்டாய்’.
இன்னும் 10,15 வருடங்களுக்கு தனது ஹீரோயிஸத்துக்கு எந்த சேதமும் வராமல் பார்த்துக் கொள்ள முடியும் விஜய் சேதுபதியால். அப்படியிருந்தும் கூட கதைதான் முக்கியம் என்பது தான் விஜய் சேதுபதியின் பதில்.
இந்தப் படத்தை அவரே தனது நண்பர் கணேஷ் உடன் இணைந்து தயாரித்திருக்கிறார். இயக்கம், ஒளிப்பதிவு, எடிட்டிங் மூன்றையும் கையாண்டிருக்கிறார் பிஜு விஸ்வநாத்.
என்னோட முதல் படத்தோட ரிலீஸ் அப்போ எப்படி படபடப்போட இருந்தேனோ அப்படிஒரு படபடப்போட தான் இப்பவும் இருக்கேன் ஏன்னா இந்தப்படம் என்னோட தயாரிப்புல முதல் படமா வருது. என்றவாரே பேச ஆரம்பித்தார் விஜய் சேதுபதி.
இயக்குநர் பிஜூ சாரை எனக்கு கடந்த மூணு வருஷமா தெரியும். என்கிட்ட இந்தக் கதையைச் சொன்னப்ப நல்லாருக்கேன்னு நான் சில தயாரிப்பாளர்கள் கிட்ட அனுப்பினேன். அவங்க படம் கமர்ஷியலா இல்லேன்னு சொல்லி திருப்பி அனுப்பிட்டாங்க. ஆனா எனக்கு இதுல கமர்ஷியலுக்குரிய விஷயங்கள் இருக்குன்னு கதையே கேட்ட மாத்திரத்திலேயே தெரிஞ்சது.
சரி ஒரு நல்ல கதையை நாமளே தயாரிச்சா என்னன்னு நெனைச்சப்ப தான் என்னோட கிளாஸ்மெட் கணேஷூம் நானும் படம் தயாரிக்கலாம்னு இருக்கேன்னு வந்தான். இந்தக் கதையை அவன்கிட்ட சொன்னேன். முதல் படமே உன் கூட சேர்ந்து பண்றேன்னு வந்துட்டான்.
சரி அப்படி என்ன கதை?
ஒரு ஆம்புலன்ஸ், அதுல இருக்கிற மூணு பேர் 48 மணி நேர ட்ராவல்ல என்னென்ன நடக்குங்கிறது தான் கதையோட சுவாரஷ்யமே. என்றவரிடம் கொஞ்சம் தொப்பை போட்ட மாதிரி இருக்கே அது ஒரிஜினலா என்று கேட்டபோது ஏற்கனவே எனக்கு கொஞ்சம் தொப்பை இருந்துச்சு, இந்தப் படத்துக்காக கூட கொஞ்சம் தொப்பையை வளர்த்துட்டேன் என்றார்.
த்ரிஷ்யம் மாதிரியான மற்ற மொழியில் வந்த நல்ல படங்களை தமிழ்ல பாபநாசம்ங்கிற பேர்ல எடுத்த மாதிரி நீங்களும் எடுப்பீங்களா? கேட்டதும் யோசிக்காமல் வந்தது பதில். இந்தப்படமே ஒரு கொரியன் படத்தோட ரீமேக் தான். அதை முறைப்படி ரைட்ஸ் வாங்கித்தான் பண்ணிருக்கோம் என்றார் எந்த ஒளிவு மறைவும் இல்லாமல்…
படம் தயாரிக்க ஆரம்பிச்சுட்டீங்க… சிவகார்த்திகேயன் மாதிரியான சக ஹீரோக்களை வெச்சு உங்க பேனர்ல படம் தயாரிப்பீங்களா? கேள்வியைக் கேட்டதும் உற்சாகமான விஜய் சேதுபதி கண்டிப்பா படம் தயாரிப்பேன் சார், அவர் விரும்பினால்… என்றார்.
அதே வேகத்தில் வந்த இன்னொரு கேள்விக்குத்தான் ஆச்சரியத்தோடு பதில் சொன்னார். ”2020 வரைக்கும் உங்களோட கால்ஷீட் புல்லா இருக்காமே..?” என்பது தான் அந்தக் கேள்வி.
கேட்டதும் சிரித்தவர் ”அப்படியெல்லாம் இல்லை சார். இன்னைக்கும் நல்ல படங்களை செலக்ட் பண்ணித்தான் நடிச்சிக்கிட்டு இருக்கேன். அந்தளவுக்கெல்லாம் நான் பிஸியா இல்ல. யாரோ இப்படி தப்பா கெளப்பி விடுறாங்க போல… இல்லேன்னா நம்ம பேர்ல கால்ஷீட் பார்க்கிற அந்த ஆள் யாருன்னு கண்டுபிடிக்கணும் என்றார் சிரித்துக் கொண்டே…
இந்த நேர்மைக்காகவே ‘ஆரஞ்சு மிட்டாய்’ இனிக்கட்டுமே…!