”நாலு படம் ஓடலேன்னா ஒருத்தனும் சீண்ட மாட்டான்!” – வேதனையை கொட்டி தீர்த்த விஜய் சேதுபதி!
மேடைகள் கிடைத்தால் ஏதாவது பஞ்சாயத்து கிளம்பி, வார்த்தை தடித்து, சில நேரங்களில் அது கை கலப்பில் போய் முடியும். அது அரசியல் மேடையாக இருந்தாலும் சரி அல்லது திரையுலக விழா மேடையாக இருந்தாலும் சரி!
நேற்று நடைபெற்ற ‘கீ’ பட ஆடியோ விழாவில் வார்த்தை தடிக்க, அடிதடி மட்டும் இல்லாமல் மீதி எல்லாமுமாக பஞ்சாயத்து ஒன்று நடந்தது.
ஜீவா, நிக்கி கல்ராணி மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படத்தை காலீஷ் இயக்கியிருக்கிறார். சிம்புவை வைத்து ஏஏஏ படத்தைத் தயாரித்த மைக்கேல் ராயப்பன் தான் இந்தப் படத்தின் தயாரிப்பாளர்.
விஜய் சேதுபதி, விஷால் உள்ளிட்டவர்களுடன் படக்குழுவினர் கலந்து கொண்ட இவ்விழாவில் சிம்புவின் ‘ஏஏஏ’ படப்பஞ்சாயத்தை தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் பேச ஆரம்பித்ததும் பரபரப்பு பற்றிக் கொண்டது.
”இந்த கீ படத்தோட தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் ரொம்ப நல்லவர். அது இந்த சினிமா இண்டஸ்ட்ரியில இருக்கிற எல்லோருக்கும் நல்லாவே தெரியும். அப்படிப்பட்ட அவர் ‘ஏஏஏ’ படத்துல ஏற்பட்ட நஷ்டத்துக்காக சிம்பு மேல நடவடிக்கை எடுக்கச் சொல்லி தயாரிப்பாளர் சங்கத்துல புகார் கொடுத்து பல நாட்கள் ஆகிருச்சு. ஆனா இதுவரைக்கும் தலைவர் விஷால் எந்த பதிலும் சொல்லவில்லை, இங்கு சொல்வார் என்று எதிர்பார்க்கிறேன் என்று தேனப்பன் பேசிக்கொண்டிருக்கும் போதே தயாரிப்பாளர் சங்கத்தில் செயற்குழு உறுப்பினராக இருக்கும் இன்னொரு தயாரிப்பாளர் ‘வின்னர்’ ராமச்சந்திரன் “இதையெல்லாம் நீங்க தயாரிப்பாளர் சங்கத்துல வந்து கேளுங்க, அதைப்பற்றி பேசிய வேண்டிய இடம் இதுவல்ல என்றார் சத்தம் போட்டார். பதிலுக்கு பி.எல்.தேனப்பனும் பேச சிறிது நேரம் அங்கு வாய்த்தகராறு நடந்தது.
இதையெல்லாம் மேடையிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த நடிகர் விஜய் சேதுபதி ”நான் விழாவுல இருந்து கெளம்புறேன் என்று இறங்கப் போக, தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் அவரை சமாதானப்படுத்தி மீண்டும் மேடையில் உட்கார வைத்தார்.
பின்னர் “ ‘ஏஏஏ’ விவகாரத்துல சிம்புகிட்ட தயாரிப்பாளர் சங்கம் விளக்கம் கேட்டு பல நாள் ஆச்சு. ஆனால் ஏதாவது பதில் வந்தால் தானே? என்ன பண்றதுன்னே தெரியல. ஒரு பைசா கூட முன் பணம் வாங்காமல் நான் மைக்கேல் ராயப்பன் தயாரிக்கும் படத்தில் நடிக்கிறேன். படம் முடிந்து என்ன பிசினஸ் ஆகுதோ, அதற்கப்புறம் சம்பளம் கொடுத்தால் போதும்” என்று சொன்னார்.
விஷாலைத் தொடர்ந்து பேசிய விஜய் சேதுபதி தனது மனக்குமுறலை கொட்டித் தீர்த்து விட்டார்… “நமக்குள்ள பிரச்சனை இருந்தா அதைப் பேசித் தீர்க்கிறதுக்கு ஒரு இடம் இருக்கு. அதை விட்டுட்டு நாம இந்த மாதிரி பொது விழாக்கள்ல சண்டைப் போட்டுக்கிறது ரொம்ப அநாகரீகமா இருக்கு. ரொம்ப வருத்தமாகவும் இருக்கு.
பொதுவாகவே சினிமாக்காரர்கள் என்றாலே கேவலமாக பார்க்கிறார்கள், தரம் தாழ்ந்தவர்கள் போல பார்க்கிறார்கள். ஒரு படம் எடுத்து பாருங்கள், எங்களுடைய கஷ்டமும் உங்களுக்கு புரியும். நாலு படம் ஓடலைனா யாரும் நடிகனோட வீட்டுப் பக்கம் வரவே மாட்டான். ஓடிக்கிட்டே இருந்தா தான் வருவான். அதை விட்டுட்டு நீங்க என்னதான் நல்லா பேசுங்க, நல்ல மனுஷனாவே இருங்க சத்தியமா உங்க பக்கம் ஒருத்தனும் வர மாட்டான் என்று கோபத்துடனும் வேதனையுடன் பேசினார்.