அனிதாவின் வீட்டுக்கு திடீர் விசிட் : குடும்பத்தினருக்கு ஆறுதல் சொன்னார் விஜய்!
அரியலூர் மாணவி அனிதாவின் மரணம் நீட் தேர்வுக்கு எதிராக தமிழகத்தை கொந்தளிக்க வைத்திருக்கிறது.
மாணவர்களும், இளைஞர்களும் தொடர்ச்சியாக பல போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள்.
முன்னதாக திரையலகத்தைச் சேர்ந்த பலரும் அனிதாவின் தற்கொலைக்கு அவர்களது இரங்கலையும், வருத்தங்களையும் தெரிவித்தனர்.
நீட் தேர்வுக்கு எதிராக இளைஞர்கள் தெருவில் இறங்கி போராட வேண்டும் என்று பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்து கொண்டே உறுமினார் கமல்ஹாசன்.
அப்படியானால் அனிதாவின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வீர்களா? என்று நிருபர்கள் கேட்டால் என் நற்பணி மன்றத்தைச் சேர்ந்த நண்பர்கள் அங்கு செல்வார்கள் என்று முடித்துக் கொண்டார்.
ட்விட்டரில் ஒரே ஒரு வரி இரங்கலோடு தனது கடமை முடிந்து விட்டதென்று கார்ப்பரேட் சாமியார் ஜக்கிக்கு ஆதரவாக இல்லாத நதிகளைத் தேடி இணைக்கக் கிளம்பி விட்டார் ரஜினி.
அஜித்தைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்?
நாட்டில் என்ன நடந்தால் எனக்கென்ன என் கேப்பையில் நெய் வடிந்தால் சரியென்று அந்த ஒரு வரி இரங்கல் கூட அவர் தரப்பிலிருந்து வரவில்லை. அது வரவும் வராது.
இப்படி பொதுப்பிரச்சனைகள் என்றாலே அடக்கியே வாசிக்கும் அல்லது வாசிக்கவே விரும்பாத ஹீரோக்கள் மத்தியில் விஜய் மட்டும் தான் தமிழ்நாட்டில் நடக்கிற எந்தப் பிரச்சனையாக அதில் தானும் ஒரு சாதாரண மனிதராக பங்கெடுத்துக் கொள்கிறார்.
முன்னதாக அனிதா தற்கொலை குறித்து விஜய் இரங்கல் தெரிவிக்கவில்லையே என்கிற கருத்து பரவலாக இருந்தது.
இந்நிலையில் நடிகர் விஜய், இன்று காலை அனிதாவின் வீட்டிற்கு திடீரென்று நேரில் சென்று அவருடைய குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியிருக்கிறார்.
அனிதாவின் சகோதரர், மற்றும் அவருடைய தந்தை ஆகியோருடன் தரையில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
திரையுலகைச் சார்ந்த எல்லா முன்னணி நடிகர்களும் வெறும் அறிக்கையோடு தங்களது கடமையை முடித்துக் கொள்ள, நடிகர் விஜய் மட்டுமே அனிதாவின் வீட்டுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறியிருப்பது எல்லோரையும் நெகிழ வைத்திருக்கிறது.