இனிமே ‘தளபதி விஜய்’ : மெர்சல் ஃபர்ஸ்ட் லுக்கில் மாறிய பட்டம்!

‘தெறி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் – அட்லி கூட்டணியின் புதிய படம் அதிக பொருட்செலவில் மிகப்பிரம்மாண்டமாக தயாராகியிருக்கிறது.
இப்படத்தில் காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் என விஜய்க்கு ஜோடியாக மூன்று கதாநாயகிகள் நடித்துள்ளனர். இவர்களுடன் சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, சத்யன் உட்பட பலரும் நடித்துள்ளனர்.
டைட்டில் வைக்கப்படாமலேயே ஆரம்பிக்கப்பட்ட இப்படத்தை விஜய் 61 என்றும், தளபதி 61 என்றும் அழைத்து வந்தனர் விஜய் ரசிகர்கள்.
எப்போது டைட்டில் வெளியாகும் என்று காத்துக்கிடந்த ரசிகர்களுக்கு விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் 21ம் தேதி டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது தயாரிப்பு நிறுவனம். அதன்படி விஜய்யின் 61 வது படத்துக்கு ‘மெர்சல்’ என்று டைட்டில் வைத்திருக்கிறார்கள்.
படத்தின் போஸ்டரில் ஜல்லிக்கட்டு காளைகள் நிற்பது போலவும், துள்ளி வந்த காளைகளை அடக்கி முடித்து விட்டு கைகளில் ஒட்டிய மண்ணை தட்டி விடுவது போல ஸ்டைலாக காட்சி தந்திருக்கிறார் விஜய். அதே போல படத்தின் டைட்டிலும் காளையின் உருவத்தில் இருப்பது போல டிசைன் செய்யப்பட்டுள்ளது. ஆக இந்தப் படத்தில் ஜல்லிக்கட்டு வீரர் உட்பட மூன்று விதமாக கெட்டப்புகளில் நடித்திருக்கலாம் விஜய் என்று உறுதியாகத் தெரிய வந்திருக்கிறது.
அதோடு போஸ்டரில் வெளியான இன்னொரு உண்மை என்ன தெரியுமா? விஜய் பெயருக்கு முன்னால் இருக்கும் பட்டம்!
வழக்கமாக விஜய் நடிக்கும் படங்களில் அவரது பெயருக்கு முன்னால் ”இளைய தளபதி” என்கிற பட்டம் தான் போடப்பட்டிருக்கும். ஆனால் இதில் ”தளபதி” விஜய் என்று பட்டம் மாற்றப்பட்டிருக்கிறது. எதற்காக பட்டத்தில் இப்படி ஒரு மாற்றம் என்பது குறித்து படத்தின் இயக்குநர் அட்லி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகும் ‘மெர்சல்’ திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் தீபாவளி விருந்தாக வருமென்று தெரிகிறது.