‘சிலர் துரோகிகளாக மாறி விட்டார்கள்’! – பரபரப்பை கிளப்பிய விக்ரம்

Get real time updates directly on you device, subscribe now.

பாலா இயக்கத்தில் விக்ரமின் மகன் துருவ் ஹீரோவாக நடித்திருக்கும் படம் ‘வர்மா’.

தெலுங்கில் வெளியான அர்ஜூன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்கான இப்படத்தில் துருவ் ஜோடியாக மேகா, பிக்பாஸ் ரைசா ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் ஈஸ்வரி ராவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வரும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் டீசர் வெளியீட்டு விழா துருவ் பிறந்த நாளான செப்டம்பர் 23-ம் தேதி சென்னையில் நடைபெற்றது.

விழாவில் கலந்து கொண்ட நடிகர் விக்ரம் பேசியதாவது, “நான் பணியாற்றிய இயக்குனர்கள் அனைவரும் சிறந்தவர்கள். அவர்கள் ஒவ்வொவருவருக்கும் ஒரு சிறப்பு இருக்கும். அதுபோல் இயக்குனர் பாலாவிடம் உள்ள சிறப்பு ஒரு கல்லை கூட நடிக்க வைத்து விடுவார். அந்தளவுக்கு அவர் திறமைசாலி.

Related Posts
1 of 23

பெரும்பாலான இயக்குனர் படத்தில் பல விஷயங்களில் அதிக கவனம் செலுத்துவார்கள். ஆனால் பாலா நடிகர்களின் நடிப்பில் மட்டுமே அதிக கவனம் செலுத்துவார். அதனால் தான் அவர் படத்தில் நடிக்கிறவர்கள் நன்றாக நடிக்கிறார்கள். என்னையே நடிக்க வைத்தாரென்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

எனக்கு எப்படி பாலா சேது படத்தில் திருப்புமுனையாக இருந்தாரோ அதுபோல் என் மகனுக்கும் அவரே முதல் படத்தை இயக்க வேண்டும் மேலும் நல்ல மோதிர கையால் குத்தப்படவேண்டும் என்று எண்ணினேன். அதன்படியே நடந்தது. ரீமேக் படங்களே இயக்காத பாலா எனக்காகவும், துருவ்வுக்காகவும் ஒத்துக்கொண்டதற்கு நன்றி.

அவர் முதல் முறையாக புதுமுகங்கள் வைத்து இயக்கியுள்ளார். மேலும் துருவ்வும் நன்றாக நடித்திருப்பான் என்ற நம்பிக்கை உள்ளது. வந்திருந்த அனைவருக்கும் நன்றி. இந்தப்பட அறிவிப்பு வந்தவுடன் சிலர் எனக்கு துரோகிகளாக மாறிவிட்டனர். இனி நான் உங்கள் ரசிகர் இல்லை. துருவ்வின் ரசிகர் என்று கட்சி மாறி விட்டனர். அவர்களை நான் பின்னாடி கவனித்து கொள்கிறேன்” என்றார் சிரித்துக் கொண்டே.

விழாவில் இயக்குனர் பாலா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.