விவசாயிகளுக்காக மத்திய அமைச்சர்களை சந்தித்த விஷால் குழுவினர் : என்ன பேசினார்கள்?
தமிழகத்தை சேர்ந்த விவசாயிகள் டெல்லி ஜந்தர்மந்திரில் 2 வாரங்களாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
விவசாய கடனை வசூலிக்க வங்கிகள் விவசாயிகளிடம் கெடுபிடி நடவடிக்கை எடுப்பதை கண்டித்தும், வறட்சி நிவாரணம், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளனர்.
இந்த நிலையில் விவசாயிகள் போராட்டம் பற்றி கேள்விப்பட்ட நடிகர்கள் விஷால், பிரகாஷ்ராஜ், ரமணா, இயக்குனர் பாண்டியராஜ் ஆகியோர் நேற்று டெல்லி சென்று விவசாயிகளை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். விவசாயிகள் கோரிக்கை களை மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் செயல்படுவோம் என்று அவர்களிடம் தெரிவித்தனர்.
பின்னர் விஷால் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக விவசாயிகள் போராட்டம் கவலை அளிக்கிறது. அவர்களது கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்க முன் வராதது வேதனை அளிப்பதாக உள்ளது. விவசாயிகள் தாங்கள் வாங்கிய கடனை நகைளையும், பொருட்களையும் விற்று அடைத்துள்ளனர். சிலர் தாலி செயினையும் விற்று இருப்பதை அறிந்து வேதனையாக இருக்கிறது. நடிகர் சங்கம் சார்பில் 10 பேர் கடன்களை மட்டுமே அடைக்க முடியும். ஆனால் ஒட்டு மொத்த கடன்களை அடைக்க மத்திய அரசால் மட்டுமே முடியும். எனவே விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்று உடனே தீர்த்து வைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
அதன் பிறகு காலை மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரியை விஷால், பிரகாஷ்ராஜ், நடிகர் ரமணா, இயக்குனர் பாண்டிராஜ் சந்தித்து பேசினார்கள். இவர்களுடன் விவசாய சங்க பிரதிநிதி ஒருவரும் உடன் இருந்தார். அவர்களிடம் பேசிய நிதின் கட்கரி நதிகள் இணைப்பு கோரிக்கையை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்கிறோம். நதிகள் இணைப்பு என்பது தற்போது முடியக்கூடியதில்லை என்றார்.
பிறகு விவசாயக் கடன் பற்றி பேசிய விஷால் அணியினர் தெரிவித்தனர். தற்போது மத்திய அரசு அறிவித்துள்ள கடன் தொகை போதுமானது இல்லை என்பதையும் அவரிடம் தெரிவித்துள்ளார்கள்.
அதன் பிறகு விஷால் அணியினர் மத்திய விவசாயத்துறை அமைச்சர் ராதா சிங்கிடம் கான்பர்ன்ஸில் பேசினார்கள். இன்று காலை மத்திய நிதி மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்து விவசாயிகள் பிரச்சனைகள் குறித்துப் பேசினார்கள்.