அணி தாவும் அரசியல் ஆடுகள களேபரத்தில்… அனிதாவும் இன்னும் பலியாகும் உயிர்களும் – பார்த்திபன் வேதனை
அரியலூரைச் சேர்ந்த ஏழை மாணவி அனிதா மத்திய அரசால் வலிந்து திணிக்கப்பட்ட நீட் என்கிற தகுதித் தேர்வினால் மருத்துவ இடம் கிடைக்காத சோகத்தில் நேற்று தற்கொலை செய்து கொண்டார்.
அவருடைய இறப்புக்கு மத்திய அரசின் அதிகார திமிரும், மாநில அரசின் கையாலாகாத்தனமும் தான் காரணம் என்று ஒட்டுமொத்த தமிழகமும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.
ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்களும் மாணவி அனிதாவின் மரணத்துக்கு இரங்கலும், அதற்கு காரணமானவர்களுக்கு கடும் கண்டனங்களையும் தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வகையில் இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் மாணவி அனிதாவின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது :
இனியும் ஆகும்.
இனியாவும் நலமாகுமென நம்பி அனிதாவின் குடும்பத்தார்க்கு வருத்தச் செய்தி மட்டும் வாசித்து விட்டு நகர்தலும் வன்முறையே.
வாழவே துவங்காத ஒரு இளம் பெண் தன் இன்னுயிரை மாய்த்துக் கொ(ல்)ள்ளும் முன் என்னவெல்லாம் யோசித்திருக்கலாம்?
அதில் NEET தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும் என்பதே பிரதம கோரிக்கையாக இருந்திருக்க வேண்டும்.
அந்த நீள் கனவோடே அவரின் மீளா கண்ணடைத்தல் நிகழ்ந்திருத்தல் வேண்டும்.
ஏழைகளின் ஓலத்திற்கும் ஒப்பாரிக்கும் Gst போட்டு விசும்பலாக்க நடுவன் அரசு நன்கு அறிந்திருக்கிறது தானே… செய்துக் கொண்டால்தானே அது தற்கொலை?
ஒரு நாடே சேர்ந்து ஒருவரை கொலை செய்தால் அதெப்படி தற்கொலையாகும்?
நூறு உயிர்களையாவது காக்கவே ஒரு மருத்துவர்.
அம்மருத்துவரையே கொல்வது ? பெருந்துயர்! இனி
மறு துயர்- மறு தவற் நிகழுமுன் தடுக்க, இன்று கோர்க்கும் இளைஞர்களின் கரங்கள் விலகா
போர் நிகழ வேண்டும்.