எனக்கு எதுக்கு ரஜினி பட டைட்டில்? : எகத்தாளம் புடிச்ச ஆர்யா
ஒரு படத்துக்கு கதை எழுதக்கூட மூளைக்கு ரொம்பவும் அழுத்தம் கொடுக்காத இயக்குநர்கள் வட்டம் அதே கதை படமாகும் போது டைட்டிலை மட்டும் மாதக்கணக்கில் யோசிக்கிறார்கள்.
சிலர் ரிலீசுக்கு ஒருமாதத்துக்கு முன்புவரை கூட படத்துக்கு ஏற்ற டைட்டில் கிடைக்காமல் உப்புக்கு உதவாத டைட்டிலை வைத்து ரிலீசுக்கு தயாராகி விடுகிறார்கள்.
இன்னும் சிலரோ அந்த லெவலுக்குக் கூட யோசிக்க நேரமில்லாமல் மாஸ் ஹீரோக்கள் நடித்த பழைய ஹிட் படங்களின் டைட்டிலை காசு கொடுத்து வாங்கி வைக்கிறார்கள்.
அதிலும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஹிட் பட டைட்டில்களுக்கு இப்போதுள்ள இளம் ஹீரோக்கள் மத்தியில் ஏகப்பட்ட கிராக்கி. முந்தாநாள் வந்த பாபிசிம்ஹா வரை பலரும் ரஜினி பட டைட்டில்களுக்கு போட்டி போடுவதை கண்கூடாகப் பார்க்க முடிகிறது.
இந்த கலவரத்தில் எந்த டென்ஷனும் ஆகாமல் ”கிடைத்தால் வைப்போம், இல்லேன்னா புதுசா யோசிப்போம்” என்று கூலாகியிருக்கிறது ஆர்யா பட யூனிட்.
‘மஞ்சப்பை’ படத்தை இயக்கிய ராகவன் இயக்கத்தில் ஆர்யா, கேத்ரீன் தெரசா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு வருகிற 10ம் தேதி திண்டுக்கல் அருகே உள்ள தாண்டிக்குடி என்ற கிராமத்தில் துவங்கவிருக்கிறது.
இதற்காக 100 ஏக்கர் நிலத்தை வாடகைக்கு எடுத்துள்ளது இப்படத்தை தயாரிக்கும் ‘சூப்பர் குட் ஃபிலிம்ஸ்’ நிறுவனம். இப்படத்திற்கு ரஜினிகாந்த் நடித்த பட டைட்டிலான ‘தனிக்காட்டு ராஜா’ என்ற டைட்டில் வைக்கப்பட்டிருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது.
ஆனால் தற்போது ‘தனிக்காட்டு ராஜா’ என்ற டைட்டிலை வைக்கவில்லை, அதற்கு பதில் வேறோரு டைட்டிலை வைக்க முடிவு செய்திருக்கிறோம் என்று அறிவித்திருக்கிறார்கள்.
வழக்கமான ரஜினி பட டைட்டில் என்றாலே அடித்துக் கொள்ளும் ஹீரோக்கள் மத்தியில் ‘தனிக்காட்டு ராஜா’ டைட்டில் கெடைச்சாப் பாருங்க, இல்லேன்னா வேற புதுசா ஒரு டைட்டிலை யோசிக்கலாம், எனக்கு எதுக்கு ரஜினி பட டைட்டில்? என்று இயக்குநரிடம் சொன்னாராம் ஆர்யா.
கீழ விழுந்தாலும் மீசையில மண்ணு ஒட்டாத ஆளுய்யா இந்த ஆர்யா…!