ஹாலிவுட்டுக்குப் போன முதல் தமிழன் நான் தான்! – நெப்போலியன் பெருமிதம்

Get real time updates directly on you device, subscribe now.

கோலிவுட்டிலிருந்து பாலிவுட் போனாலே பெரிய விஷயம் என்று நினைக்கும் ஹீரோக்களுக்கு மத்தியில் கோலிவுட்டிலிருந்து நேராக ஹாலிவுட் படங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார் பிரபல நடிகர் நெப்போலியன்.

ஏற்கனகே ‘டெவில்ஸ் நைட்’ என்ற ஆங்கிலப் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த நெப்போலியன் மீண்டும் டெல் கணேசன் டைரக்‌ஷனில் ‘கிறிஸ்துமஸ் கூப்பன்’ என்ற படத்தில் நடித்திருக்கிறார்.

இருவருமே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதால் அந்த ஆங்கிலப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவை சென்னையில் எளிய முறையில் நடத்தினார்கள்.

நிகழ்ச்சியில் படத்தில் நெப்போலியனுடன் இணைந்து நடித்திருக்கும் ஹாலிவுட் நடிகை ஷீனாவும் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய நெப்போலியன், ”என்னைப்போலவே தயாரிப்பாளர் டெல் கணேசனும் அமெரிக்காவில் சாப்ட்வேர் கம்பெனி நடத்தி வருகிறார். ஒரு நாள் திடீரென்று அவர் என்னிடம் வந்து நான் ஒரு ஹாலிவுட் படம் தயாரிக்கப் போகிறேன். அதில் உங்களுக்கு ஒரு கேரக்டர் இருக்கிறது. அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்றார். நானும் நடித்தேன்.

Related Posts
1 of 134

“தமிழ் சினிமாவில் இருந்து அமெரிக்காவுக்குச் சென்று ஆங்கிலப் படங்களில் நடித்தவர்கள் யாரும் இல்லை என்று நினைக்கிறேன். நடிகர் ரஜினிகாந்த் ‘பிளட் ஸ்டோன்’ என்ற படத்தில் நடித்தார். அந்தப் படத்தின் படப்பிடிப்பு கூட மைசூரில் நடந்ததாக சொன்னார்கள். கமல்ஹாசன் அமெரிக்காவில் நிறைய படங்களை படமாக்கியிருக்கிறார். ஆனால் ஆங்கிலப் படங்களில் நடித்ததில்லை. அந்த வகையில் நேரடி ஆங்கிலப் படத்தில் நடித்த முதல் தமிழன் நான் தான் என்று பெருமையோடு சொல்லிக் கொள்கிறேன்.

நான் முதன் முதலில் எனது குருநாதர் பாரதிராஜா இயக்கத்தில் 27 வயதில் நடிகராக அறிமுகமானேன். அப்போது ‘புதுநெல்லு புது நாத்து’ படத்தில் 60 வயதுக்காரர் தோற்றத்தில் நடித்தேன். பிறகு தான் படங்களில் நாயகனாக நடித்தேன்.

பின்னர் நான் ராயப்பேட்டையில் சொந்த வீடு கட்டியபோது சினிமாவில் நடிக்கிற உனக்கு ஏன் இங்கு வீடு என்று எல்லோரும் என்னைக் கேட்டபோது என்றைக்காவது நான் ஒருநாள் கோட்டைக்கு போவேன். அதற்கு இங்கு வீடு கட்டினால் தான் செல்வதற்கு எளிதாக இருக்கும் என்று சொன்னேன். அதேபோலவே எம்.எல்.ஏ, எம்.பி, மத்திய அமைச்சர் என்று அரசியலில் வளர்ந்தேன்.

இந்த ‘கிறிஸ்துமஸ் கூப்பன்’ படத்தில் ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். முதல் ஹாலிவுட் படத்தில் ஹீரோயினுடன் நடிக்கவில்லை. ஆனால் இந்தப் படத்தில் ஹீரோயினுடன் நடித்திருக்கிறேன். அனேகமாக அடுத்த படத்தில் ஹீரோவானாலும் ஆச்சர்யமில்லை.

எனது வாழ்க்கையில் சினிமா, அரசியல் இரண்டிலுமே நான் நினைத்தது எல்லாமே நடந்திருக்கிறது. அதேபோல் இப்போது ஹாலிவுட்டில் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அதுவும் விரைவில் நிறைவேறும் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார் நெப்போலியன்.