தஞ்சை விவசாயிகளுக்கு 80 லட்சம் நிதி! : விளம்பரம் தேடாமல் உதவிய தனுஷ்

பேனா, பென்சில் கொடுத்தாலே இரண்டு பக்கங்களில் மீடியாக்களுக்கு பிரஸ் ரிலீஸ் அனுப்புகிற விளம்பரப் பிரியர்கள் நிறைந்தது சினிமா உலகம். அப்படிப்பட்ட ஜிகினா உலகத்தில் விவசாயத்தால் பாதிக்கப்பட்ட தஞ்சை விவசாயிகளுக்கு எந்த விளம்பரப்படுத்தலும் இல்லாமல் நிதியுதவி செய்திருக்கிறார் நடிகர் தனுஷ்.
சில வாரங்களுக்கு முன்பு பத்திரிகையாளர் ராஜூவ்காந்தி ‘கொலை விளையும் நிலம்’ என்ற பெயரில் ஆவணப்படம் ஒன்றை திரையிட்டார். அந்த திரையிடலுக்கு வந்தவர்களில் இயக்குநர் சுப்ரமணிய சிவாவும் ஒருவர். படத்தில் தஞ்சை விவசாயிகளின் வறுமை, அவர்களின் வேதனை, கண்ணீர் அத்தனையும் பார்த்தவர் விவசாயிகளின் துயரம் எப்படிப்பட்டது? அதற்கு என்னவெல்லாம் காரணம்? போன்றவற்றை தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் மூலமாக வெளிப்படையாகப் பேசினார்.

அதோடு நின்று விடவில்லை. அந்த ஆவணப்பட திரையிடல் பற்றி கேள்விப்பட்ட நடிகர் தனுஷிடமும் படத்தை பற்றி விசாரித்திருக்கிறார். உடனே படத்தை அவரிடம் கொண்டு சென்றதோடு விவசாயிகளின் துயரத்தையும் எடுத்து சொல்லியிருக்கிறார் சுப்ரமணிய சிவா.
படத்தை பார்த்து முடித்ததும் கண்கலங்கிய தனுஷ் ”விவசாயிகளின் வேதனையை கண்டு நாம் ஏதாவது பண்ணனும் சிவா சார், என்ற தனுஷின் வார்த்தைகளை கேட்டதும் அதற்கான முயற்சிகளில் இறங்கி விட்டார். இதோ இன்று தனுஷ், பலியான விவசாய குடும்பங்களில் 125 குடும்பங்களை நேரில் அழைத்து வந்து அவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் விதம் சுமார் 85 லட்சம் ரூபாயை நிதி உதவியாக கொடுத்திருக்கிறார். இந்தத் தகவல் எந்த மீடியாவுக்கும் தெரியாது. எந்தவித விளம்பரப்படுத்தலும் இல்லாமல் நடந்த இந்த நிகழ்வை ஆணவப்பட இயக்குநர் ராஜூவ்காந்தி வாட்ஸ் அப்பில் பகிர்ந்திருக்கிறார்.
விவசாயிகள் தான் இந்தியாவின் முதுகெழும்பு என்று மேடைக்கு மேடை முழங்கிக் கொண்டே கார்ப்பரேட் காவாளிகளுக்காக விவசாயத்தை அழித்தொழிக்கிற வேலையைச் செய்கிற அரசுகளை விட தனுஷ் போன்றவர்களின் தங்க மனசை வாழ்வாங்க வாழப் போற்றுவது வெகு சிறப்பு.