கேரளாவுக்கு விஜய் 70 லட்சம் கொடுத்தார், அரசியல்வாதிகள் சொந்த பணத்தை கொடுத்தார்களா? – இயக்குனர் பேரரசு கோபம்
பேய் சீசன் இன்னும் முடிந்தபாடில்லை. வாரத்துக்கு ஒரு பேய்ப்படமாவது கோலிவுட்டில் ரிலீசாகி விடுகிறது.
அந்த வகையில் “பேய் எல்லாம் பாவம்” என்றொரு திரைப்படம் தயாராகியிருக்கிறது. கதாநாயகனாக அரசு நடிக்க, கதாநாயகியாக டோனா சங்கர் நடித்திருக்கிறார். இவர்களுடன் அப்புக்குட்டி, ஸ்ரீஜித்ரவி, தர்ஷன், சிவக்குமார், ரசூல் மற்றும் பலர் நடித்துள்ளனர். கதை, திரைக்கதை, வசனத்தை தவமணி பாலகிருஷ்ணன் எழுத படத்தை இயக்கியிருக்கிறார் தீபக் நாராயணன்.
தரகன் சினிமாஸ் சார்பாக ஹன்ஸிபாய் தயாரித்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட இயக்குனர் பேரரசு கேரள வெள்ளத்துக்கு அரசியல்வாதிகள் என்ன செய்தார்கள் என்று கோபத்தோடு கேள்வியெழுப்பி பேசினார்…
”மலையாளத்திலிருந்து எந்த இயக்குனர் வந்தாலும், தமிழ் இயக்குனர் போலவே கொண்டாடுவோம். “பேய் எல்லாம் பாவம்” பாடல், ட்ரெய்லர் பார்த்தேன் மிக சிறப்பாக இருந்தது.
இந்த இயக்குனர் தீபக் நாராயண் மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்து உயர்ந்த இடத்தை பிடித்த பாஸில், சித்திக் போல மிக உயர்ந்த இடத்தை பிடிப்பார். கலைக்கு மொழியே தேவையில்லை ஏனெனில் அனைவரும் இந்தியர்கள்.
சமீபத்தில் கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது ஒவ்வொரு தமிழனும் தன்னால் முடிந்த உதவிகளை முன்னின்று கொடுத்தார்கள். நடிகர்களும் தங்களால் முடிந்த உதவிகளை செய்தார்கள். இளைய தளபதி விஜய் 70 லட்சம் சொந்த பணத்தை செலவு செய்து நிவாரண பொருட்களை வழங்கினார். இதுபோல எந்த அரசியல்வாதியாவது சொந்த பணத்தை கொடுத்தார்களா என கேள்வி எழுப்பினார்.
கேரளா ரசிகர்கள் மம்முட்டி, மோகன்லால் இருவருக்கும் இணையான வசூல், ஓப்பனிங் விஜய் சார் படங்களுக்கு எப்போதும் கேரளாவில் இருக்கும். எந்த பிரச்சினை என்றாலும் சினிமாக்காரர்களே குரலும், பொருளும் தருகிறார்கள் என்று பேசினார்.
விழாவில் கவிஞர் சிநேகன், இயக்குனர் ராசி அழகப்பன், இயக்குனர் கல்யாண், மைம் கோபி, கில்டு யூனியன் தலைவர் ஜாகுவார் தங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.