அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் இருக்கிறார் ‘கபாலி’ ரஞ்சித் : ஹீரோ யார் தெரியுமா?
பெருத்த வசூலோடு சர்ச்சைகளையும் வாரிக்குவித்த ‘கபாலி’ திரைப்படத்தின் சூடு ஓரளவுக்கு குறைய ஆரம்பித்து விட்டது.
இருந்தாலும் அந்தப் படம் குறித்தான பரபரப்புகள் அவ்வப்போது வந்து கொண்டு தான் இருக்கின்றன.
அப்படி ஒரு பரபரப்பு தான் இயக்குநர் ரஞ்சித்தின் அடுத்த படம் பற்றிய தகவல்கள்.
ரஞ்சித்தின் அடுத்த படத்தின் ஹீரோ விஜய்யா? சூர்யாவா? என்கிற கேள்விக்கு இரண்டு பேர்களின் பெயரும் செய்திகளில் அடிபட்டு வருகிறது.
அதே நேரம் இரண்டு பேருமே ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க விரும்பவில்லை என்கிற ரீதியிலான செய்திகள் தான் அதிகம் அணிவகுக்கின்றன.
ஆனால் இப்படி வெளியாகும் செய்திகளில் துளி கூட உண்மையில்லை என்று தெரிவித்திருக்கிறார் இயக்குநர் ரஞ்சித்.
இதுகுறித்து அவர் தரப்பில் மேலும் தெரிவித்திருப்பதாவது :
‘கபாலி’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின் இயக்குநர் பா.ரஞ்சித் தற்போது தன்னுடைய அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் இருக்கிறார். கதை முழுவதும் தயாரானவுடன் தன்னுடைய அடுத்த படத்தை பற்றிய அறிவிப்பை வெளியிடுவார். அவர் எந்த நடிகர்களுக்கும் கதை சொல்லவில்லை.
ஆகையால் அவர் தரப்பிலிருந்து அதிகாரபூர்வ தகவல்கள் வெளிவரும் வரை வந்து கொண்டிருக்கும் பொய்யான தகவல்களை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.