என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா – விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

RATING – 2.8/5

நடித்தவர்கள் – அல்லு அர்ஜூன், அனு இமானுவேல், அர்ஜூன், சரத்குமார், நதியா, சாருஹாசன், சாய் குமார், பிரதீப் ராவத் மற்றும் பலர்

ஒளிப்பதிவு – ராஜூவ் ரவி

இசை – விஷால் – சேகர்

இயக்கம் – வி. வம்சி

வகை – நாடகம், ஆக்‌ஷன்

சென்சார் பரிந்துரை – ‘U/A’

கால அளவு – 2 மணி நேரம் 48 நிமிடங்கள்

கேஷ்பாபு உட்பட முன்னணி தெலுங்கு ஹீரோக்களின் பல படங்கள் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு, அதில் சில வசூலிலும் சக்கை போடு போட்டிருக்கிறது.

அந்த வரிசையில் முதல்முறையாக அல்லு அர்ஜூன் நடிப்பில் தெலுங்கிலிருந்து தமிழில் ‘டப்’ ஆகியிருக்கும் படம் தான் இந்த ”என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா”.

எல்லைக்குச் சென்று நாட்டைக் காக்க வேண்டுமென்கிற ஒரே குறிக்கோளுடன் இருக்கும் கோபக்கார ராணுவ வீரரான ஹீரோ அல்லு அர்ஜூனின் கனவு நிறைவேறியதா? இல்லையா? என்பதே இப்படத்தின் கதை.

படத்தின் டைட்டிலைப் போலவே முக்கால்வாசிக் காட்சிகள் முழுக்க முழுக்க தேசப்பற்றை வலியுறுத்துகிறது. அதை தெலுங்கு ரசிகர்களுக்கு ஏற்றாற்போல கார நெடியடிக்க, கமர்ஷியல் கலந்து கொடுத்திருக்கிறார் இயக்குனர் வி.வம்சி.

பொதுவாகவே தெலுங்கு ஹீரோக்கள் வேகமாக வருகிற ரயிலை ஒற்றை விரலால் நிப்பாட்டினால் கூட நிஜத்தில் அது சாத்தியமில்லை என்று தெரிந்தும் அந்த ஹீரோக்கள் காட்டும் மாஸுக்காகவே பெரும் வரவேற்பைக் கொடுத்து ரசிப்பார்கள் தெலுங்கு ரசிகர்கள்.

Related Posts
1 of 44

இதிலும் அப்படிப்பட்ட பிரம்மிக்க வைக்கும் பிரம்மாண்டமான சண்டைக்காட்சிகள் உண்டு. அதற்காகவே தனது உடம்பை ஒரு பாடிபில்டரைப் போல கட்டுக் கோப்பாக வளர்த்து காட்சி தரும் அல்லு அர்ஜூன் நிஜமாகவே சண்டைக் காட்சிகளில் மிரட்டுகிறார். குறிப்பாக கோபப்படுகிற போதெல்லாம் அவர் முகத்தில் காட்டுகிற எக்ஸ்பிரஷன்கள் எக்செலண்ட்!

‘வாவ் டைப்’ சண்டைக்காட்சிகளை அமைத்துக் கொடுத்த சண்டைப் பயிற்சியாளர்கள் கோச்சா, ரவி வர்மா, பீட்டர் ஹெயின், ராம் லக்‌ஷ்மண் ஆகியோருக்கு ஸ்பெஷல் பாராட்டுகள்.

 மிஸ்கினின் ‘துப்பறிவாளன்’ படத்தின் முழுக்க போர்த்திக் கொண்டு வந்தவரா இவர்? என்று பாடல் காட்சிகளில் ஆடைக்குறைப்பு செய்து புருவம் உயர்த்த வைக்கிறார் நாயகி அனு இமானுவேல். படத்தில் ஹீரோ அல்லு அர்ஜூனைக் காதலிக்கும் ஒரு சாராசரி நாயகியாகத்தான் வருகிறார். அதைத்தவிர அவருக்கு குறிப்பிட்டுச் சொல்லி பாராட்டும்படியான கேரக்டர் இல்லை.

அல்லு அர்ஜுனின் அப்பாவாகவும், மனோதத்துவ டாக்டராகவும் வருகிறார் அர்ஜூன். அவருக்கும், அல்லு அர்ஜூனுக்குமான காட்சிகள், உரையாடல்களைப் பார்க்கும் போது அவ்வப்போது ஜெயம் ரவி நடித்த ‘சந்தோஷ் சுப்ரமணியம்’ படத்தை ஞாபகப்படுத்துவதாக உள்ளது. என்றாலும் அப்பா – மகன் உறவு, அது சார்ந்த பிரச்சனைகளை அழகாக வடிவமைத்தது நெகிழ்வு.

அம்மாவாக வரும் நதியா, முன்னாள் ராணுவ வீரராகவும், அவரது அப்பாவாகவும் வரும் சாய் குமார், சாருஹாசன் ஆகியோருக்கெல்லாம் படத்தில் பெரிதாக வேலை இல்லை. வில்லன்களாக வரும் சரத்குமார், பிரதீப் ராவத் இருவரில் சரத்குமார் தான் நடிப்பில் ஸ்கோர் செய்கிறார்.

தெலுங்கிலிருந்து தமிழுக்கு டப் செய்யப்பட்ட படமாக இருந்தாலும் லிப் மூவ்மெண்ட்டுக்கு ஏற்றாற்போல்

”எதிரிக்கு கூட சாப்பாடு போடுற ஆளு நானு. நானும் தான் சார் எதிரி வீட்ல கூட சாப்பிடுவேன்.”

”கஷ்டத்தை சொத்து தான் தீர்க்கும். தன்மானம் இல்லை.”

”கஷ்டம் வரும்போது கெடைக்கிறது நியாயம். நஷ்டம் வந்த பிறகு கெடைக்கிறது பரிதாபம்.”

போன்ற ‘பஞ்ச்’களுடன் கூடிய அர்த்தமுள்ள வசனங்களைக் கொடுத்து ஒரு நேரடி தமிழ்ப்படத்தைப் பார்ப்பது போன்ற உணர்வை முழுமையாகத் தந்திருக்கிறார் வசன கர்த்தா விஜய் பாலாஜி.

விஷால் – சேகரின் பின்னணி இசை மிரட்டல், பாடல்கள் இடைச்செருகல். காஷ்மீரின் அழகை மெய் மறந்து ரசிக்க வைக்கிறது ராஜீவ் ரவியின் ‘பளிச்’சென்ற ஒளிப்பதிவு.

நாட்டைக் காப்பது முக்கியம் தான். அதை விட முக்கியம் அந்த நாட்டுக்குள் கொட்டமடிக்கும் ரெளடிகளின் கூட்டம். அந்தக் கூட்டத்தை அடியோடு ஒழித்து விட்டால் இந்தியா எல்லோருக்கும் சொந்த வீடு மாதிரி தான் என்கிற ஒற்றுமை உணர்வை தரும் படம் தான் இந்த ‘என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா.’